மதுரை :

துரையில் உள்ள அரசாங்க மருத்துவக்கல்லூரியில் படித்து கடந்த 2018 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற ஆண் டாக்டர் ஒருவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த ஆண்டு அவரது உடலில் சில மாற்றங்கள் தோன்றியதால், அவர், அறுவை சிகிச்சை செய்து தன்னை பெண்ணாக மாற்றி கொண்டார். இதனால் அவர் டாக்டர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

பெண்ணாக மாறியதால், அவரது குடும்பமும் வீட்டில் சேர்க்கவில்லை. இதனால் திருநங்கைகள் கூட்டத்தில் அந்த டாக்டர் சேர்ந்து கொண்டார்.

சில தினங்களுக்கு முன்னர், மதுரையில் உள்ள முக்கிய தெருக்களில் திருநங்கைகள் கூட்டமாக சென்று கடை கடையாக பிச்சை எடுத்துள்ளனர்.

“திருநங்கைகள் கும்பலாக வந்து பிச்சை எடுப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது” என யாரோ போலீசுக்கு புகார் செய்தனர். அங்கு வந்த போலீசார், அவர்களை சுற்றி வளைத்து விசாரித்தனர்.

அப்போது தான், பிச்சை எடுத்த திருநங்கைகளில். பெண்ணாக மாறிய ஆண் டாக்டரும் ஒருவர் என்பது தெரிய வந்தது. இதனால் அவர் விடுவிக்கப்பட்டார்.

அந்த டாக்டர் இப்போது, திருநங்கைகளுடன் வசித்து வருகிறார். அவர், தனது சான்றிதழில் பெண்ணாக மாறியதற்கான, திருத்தம் செய்து புது சான்றிதழ் வாங்கினால் அவர் மீண்டும் டாக்டர் தொழிலில் ஈடுபட முடியும்.

எனவே இது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போலீசார், அந்த டாக்டருக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சியில்  மதுரை மாநகரம், திலகர் திடல் காவல் ஆய்வாளர் கவிதா முயற்சி மேற்கொண்டார்.

இதுகுறித்து தன்னுடைய காவல் துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று மருத்துவ தொழில் செய்வதற்கு தேவையான உபகரணங்களை தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்ததுடன் மருத்துவ மனை அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.

சமூக அங்கீகாரமின்றி , மதுரையில் வறுமையில் வாடிய திருநங்கை தற்போது மருத்துவராக தன்னுடைய பணியை தொடங்க உள்ளார்.

இதற்காக பெரும் முயற்சி எடுத்த காவல் ஆய்வாளர் கவிதா அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

– பா. பாரதி