புதுடெல்லி: திருநங்கைகளுக்கு சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டை அளிக்கும் வகையிலான சட்ட மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தங்களின் பாலினம் மற்றும் உரிமைகளை நிர்ணயித்துக்கொண்டு, சமூகப் புறக்கணிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள, திருநங்கைகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலேயே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருநங்கைகள் பிச்சையெடுப்பதை குற்றமாக்கும் சர்ச்சைக்குரிய அம்சம் இந்த மசோதாவிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. முந்தைய அரசாங்கம் இந்த மசோதாவை தாக்கல் செய்தபோது, இந்த அம்சம் அதில் இடம்பெற்றிருந்தது.

இந்த மசோதாவின்படி, ஒரு திருநங்கை, தான் ஆணா? பெண்ணா? அல்லது திருநங்கையா? என்பதை தனது விருப்பப்படி அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். அவர், பாலின மாற்று சிகிச்சை மேற்கொண்டிருந்தாலும் அல்லது ஹார்மோனல் தெரப்பி மேற்கொண்டிருந்தாலும் பிரச்சினையில்லை.

மேலும், இந்த மசோதாவின்படி, ஒரு திருநங்கை, மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட ஆய்வு கமிட்டியை அணுகி, தான் ஒரு திருநங்கை என்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.