திருவனந்தபுரம்:

சாரா ஷீக்கா என்ற திருநங்கை கேரளா மாநிலம் திருவனந்தபுரம் டெக்னோ பூங்காவில் உள்ள எம்என்சி நிறுவனமான பிரபல யுஎஸ்டி குளோபலில் மனித வள பிரிவு நிர்வாகியாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கேரளாவில் எம்என்சி.யில் (பன்னாட்டு நிறுவனம்) பணியாற்றும் வாய்ப்பு பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமை சாராவுக்கு கிடைத்துள்ளது. இந்த பணி கிடைக்க சாராவின் நண்பர்கள் சிலர் உதவிகரமாக இருந்துள்ளனர்.

இது குறித்து சாரா கூறுகையில், ‘‘கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அபுதாபியில் இருந்து திரும்பினேன். பல நிறுவனங்களில் நேர்காணலை சந்தித்தேன். நேர்காணலில் நான் வெற்றி பெற்றேன். ஆனால் நான் திருநங்கை என்பதால் என்னை பணியில் சேர்க்க மறுத்துவிட்டனர். நான் ஆண் என்று கூறி வேலைக்கு சேர முடியும். ஆனால் நான் யார்? என்ற உண்மையை தெரிவிக்க விரும்பினேன்.

எனது நண்பர் பிரஜித், யுஸ்டி குளோபல் நிறுவனத்தில் வேலை கிடைக்க உதவி செய்தார். அவர்கள் வேலை அளிக்க தயாராக இருப்பதாகவும், ஆனால் 3 சுற்று நேர்காணலில் வெற்றி பெற வேணடும் என்று தெரிவித்தனர். தற்போது எனது கனவு நினைவாகிவிட்டது.

இந்த நிறுவனம் நான் திருநங்கை என்பதை ஏற்றுக் கொண்டு பணி கொடுத்தது. என்னுடன் பணியாற்றும் இதர ஊழியர்கள் என்னை எவ்வாறு நடத்துவார்கள் என்ற அச்சம் இருந்தது. ஆனால், அவர்கள் என்னை அரவணைத்து, எனது அடையாளத்திற்கு ஏற்ற அங்கிகாரத்தை கொடுத்தது ஆச்சர்யமாக இருந்தது.’’ என்று தெரிவித்தார்.

இவர் கேரளா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி தாவரவியல் பட்டம் பெற்று சென்னை மற்றும் அபுதாபியில் உள்ள சில தனியார் நிறுவனங்களில் மனித வள பிரிவில் பணியாற்றியுள்ளார். மேலும், சென்னை சுதர்லாண்ட் குளோபல் சர்வீஸ் நிறுவனத்தில தர பகுப்பாய்வளராகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும், அவர் கூறுகையில்,‘‘ இதற்கு முன் நான் பணிபுரிந்த இடங்களில் எனது அடையாளத்தை மறைத்தேன். பள்ளி, கல்லூரி, பணிபுரியும் இடம் ஆகியவற்றில் ஒரு ஆணாக தான் இருந்தேன். ஆனால், எனது செயல்பாட்டை பார்த்து என்னை அதிகளவில் துன்புறுத்தினார்கள். அதனால் எனது பழைய அனுபவங்களை மறக்க நினைக்கிறேன்’’ என்றார்.

மேலும், இவரை ஏற்க மறுத்ததால் கடந்த சில ஆண்டுகளாக சாரா தனது குடும்பத்தில் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

‘‘கடந்த 2 ஆண்டுகளாக தான் நான் திருநங்கை என்ற எனது அடையாளத்தை வெளிப்படுத்தி வருகிறேன். திருநங்கைகளுக்காக செயல்படும் சில அமைப்புகளில் உள்ளவர்களோடு இணைந்து பணியாற்றி உள்ளேன். எனது மீதமுள்ள காலத்தில் எனது அடையாளத்துடன் வாழ விரும்பினேன். இதனால் எனது முந்தைய பணியை விட்டுவிட்டு முழு திருநங்கையாக மாறிவிட்டேன்’’ என்றார் சாரா.

கேரளாவில் ஏற்படடுள்ள இந்த மாற்றம் வரவேற்க்கத்தக்கது என்று கூறிய அவர், ‘‘காவல் துறையில் திருநங்கை, பள்ளி, மெட்ரோ ரெயில் பணி நியமனம் போன்ற முன்னேற்றங்கள் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனது பணி நியமனம் இதர நிறுவனங்களுக்கும் முன் உதாரணமாக கொண்டு திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். இன்னும் சில ஆண்டுகளில் குறைந்தபட்சம் கேரளாவில் திருநங்கைகள் முக்கிய பங்காற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.