டில்லி:

வருமான வரித் துறையில் பான் கார்டு திருநங்கைகள் தனி பாலினமாக கருதப்படாமல் இருந்தது. இ ந்நிலையில் மத்திய நிதியமைச்சகம் நேற்று வருமான வரித் துறை விதிகளில் திருத்தம் செய்துள்ளது.

அதில், 49ஏ மற்றும் 49ஏஏ ஆகியவற்றில் திருநங்கைளுக்கு என்று தனியாக பாலினத்தை குறிப்பிடும் வகையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை 4வது திருத்தமாக கருதப்படுகிறது. இது உடனடியாக அமலுக்குவந்துள்ளது. இதன் மூலம் பான் கார்டு பெறுவதற்கான விண்ணப்பத்தில் திருநங்கைகள் தனி பாலினமாக தெரிவிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னரே திருநங்கைகள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தும் உரிமையை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இருந்தபோதும் வருமான வரித் துறையின் பான் கார்டு விண்ணப்பங்களில் திருநங்கை என்று தனியாக குறிப்பிடும் வகையிலான வாய்ப்புகள் எதுவும் அளிக்கப்படவில்லை.

அதனால் திருநங்கைகள் ஆண் அல்லது பெண் என்ற பாலினத்தை தேர்வு செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆதார் மற்றும் பான் கார்டுடன் பாலினம் ஒத்துப்போகாததால் வங்கி கணக்கு தொடங்க கூட முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.