சென்னை,

ஜெயலலிதா மரணத்தை வைத்து அரசியல் செய்வது வேதனையானது என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ., வெற்றிவேல் வெளியிட்டார் இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தவீடியோ ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர் களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது,

ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு  வதந்திகள் வெளியானபோதே,  மக்களின் சந்தேகத்தை தீர்க்கும் வகையில் இதுதொடர்பான வீடியோ, படக்காட்சிகளை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை நானும் பார்த்தேன். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, பல தகவல்கள் வந்தன. காவிரி விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வந்தன. அப்போது வீடியோ காட்சியை ஏன் வெளியிட வில்லை என கருணாநிதி கூறியிருந்தார்.

அப்போதே வெளியிட்டிருந்தால் பிரச்னை வந்திருக்காதுஜெயலலிதாவின் மரணத்தையே அரசியலுக்கு பயன்படுத்தும் அளவுக்கு கீழ்தரமாக அவர்கள் இருப்பார்கள் என நினைக்கவில்லை.

தற்போது,  ஜெயலலிதா மரணத்தை அதிமுகவினர்  அரசியலுக்கு பயன்படுத்தி கீழ்தரமாக நடந்து கொள்கின்றனர். இது வேதனையானது  என்று குற்றம் சாட்டினார்.

மேலும், ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுகவினர்  6,000 ரூபாய் பணம் பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்தபோது அதுகுறித்து புகார் அளித்தும்,  தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

தற்போது ஜெயலலிதா தொடர்பான வீடியோ வெளியிட்டது குறித்து தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.