வெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும்! கமல்ஹாசன்

சென்னை: வெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர்  கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டுள்ளார்.

அரசியல் கட்சி தொடங்கி  இரண்டரை ஆண்டுகள் கடந்தும், முழுமையான அரசியல்வாதியாக மாறாமல், ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால என்ற பழமொழிபோல, திரைத்துறையிலும், அரசியல் துறையிலும் கால்பதித்து காலத்தை ஓட்டி வருகிறார். இதுவரை எந்தவொரு மக்கள் போராட்டத்துக்கும் முன்னிலை வகிக்காமல், வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக எண்ணி, தற்போது தனியார் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கோடிகளை குவித்து வருகிறார்.

நாம் கனவு காண்கிறோம். ஒரு புதிய கட்சி, ஒரு புதிய பாதை, ஒரு புதிய கொள்கை. ‘மக்கள் நீதி மய்யம்’ தமிழகம் விழித்தெழட்டும்’’ என்று கட்சி தொடங்கியபோது டிவிட் போட்ட கமல், அதுபோல அவ்வப்போது பஞ்ச் டயலாக்குகளை டிவிட்டாக போட்டு வருகிறார்.

இந்த நிலையில், தற்போது,  வெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டம் அமலுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. 2.2 லட்சம் கோரிக்கைகள் இன்றும் மத்திய மாநில தகவல் உரிமை ஆணையங்களில் நிலுவையில் உள்ளன.

வெளிப்படையான நிர்வாகமே நேர்மையான அரசாட்சிக்கு வித்திடும். ஒவ்வொரு குடிமகனும் தமக்கான உரிமையினைப் பெறத் தெளிந்தால், நாமே தீர்வு.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அந்த தீர்வை நோக்கி தனது கட்சி என்ன செய்ய வேண்டும், தனது கட்சி தொண்டர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிவிக்காமல், எப்போதும்போல குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்.