சென்னை :

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள  போக்குவரத்து ஊழியர்களை  பணிக்குத் திரும்புமாறு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக சுமார் 40 தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆறு மணி நேரமாக நடந்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போக்குவரத்து ஊழியர்கள் நேற்று மாலை திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பயணிகள் பெரும் துன்பத்துக்கு ஆளாயினர்.

இந்நிலையில் ஊதிய பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது : போக்குவரத்து ஊழியர்களின் பேச்சுவார்த்தை சுமார் 12 சுற்றுகளைக் கடந்து நடந்துள்ளது. 2.57 காரணி ஊதிய உயர்வு வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். . அரசு நிதித்துறையிடம் அனுமதி பெற்று 2.44 காரணி ஊதிய உயர்வு தர ஒப்புக் கொண்டுள்ளது

அரசு ஊழியர்களுக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் ஊதிய வித்தியாசம் உள்ளதாக ஊழியர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.  சில தருணங்களில் போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய விகிதம் அதிகமாக இருக்கும். குறைந்தபட்சம் 2,600 முதல் அதிகபட்சமாக 11 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு கிடைக்கும். ஊதிய உயர்வு அதிகரிப்பு சென்ற ஒப்பந்தத்தை விட தற்போது அதிகப்படியான ஊதியம் தான் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போட வேண்டும். அதை 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என்று போக்குவரத்து ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர். அதையும் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

புதிய ஊதிய ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ. 83 கோடி செலவாகும். இந்த ஊதிய ஒப்பந்தத்தை 32 தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. 10 தொழிற்சங்கங்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றன, மக்களுக்கும் அரசுக்கும் சிரமம் ஏற்படுத்தாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக அமைதியான முறையில் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

பேருந்து போக்குவரத்து நேற்று மாலை முதலே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள், பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்களில்  ஈடுபட்டனர். இதே நிலை நீடீத்தால் இன்று காலை பள்ளி மற்றும் அலுவலகம் செல்பவர்களின் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும்.