போக்குவரத்து ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப  உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப  சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை  கிளை உத்தரவிட்டுள்ளது.

ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள்  காலவரையற்ற  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கு எதிராக செந்தில் குமரய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், “போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் சட்ட விரோதமானது. அவர்கள் மீது எஸ்மா சட்டத்தை பயன்படுத்த வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரணை நடத்த வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் முரளிதரன், சேஷாயி முன்பு  இன்று மாலை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘போக்குவரத்து கழக தொழிலாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும். போராட்டம் செய்வது தவறல்ல. ஆனால் தொடர் வேலைநிறுத்தம் செய்வதால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் செய்வதை ஏற்க முடியாது.

அதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும். பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும்’’ என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.