போக்குவரத்து தொழிலாளர்களின் இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வி!

சென்னை:

போக்குவரத்து ஊழியர்களின் 3வது கட்ட பேச்சு வார்த்தை இன்று நடைபெற்ற நிலையில், அது தோல்வியில் முடிந்துள்ளது. இதன் காரணமாக, பல தொழிலாளர்கள் பணிக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் பேருந்து இயக்கம் குறைந்துள்ளது.

14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை அரசு உடனே தொடங்க வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களின் நிதிநிலை அறிக்கையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்கு வரத்து துறை ஊழியர்கள் கடந்த இரு நாட்களாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகங்கள் முன்பும் காத்திருப்பு போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தில், தொழிற்சங்க நிர்வாகிகள், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக 3ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி இன்று  சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  அதில் எந்த முடிவு எட்டப்படாமல் தோல்வியடைந்தது. இதனால், 3வது நாளாக இன்றும் அவர்களின் போராட்டம் தொடர்கிறது.

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக, சென்னை உள்பட பல மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.