கோவை: போலி இ பாஸ் மூலம் ராஜஸ்தானில் இருந்து கோவை வந்த 30 பேர், அதிகாரிகளிடம் சிக்கினர். அவர்கள் பயணித்த ஆம்னி பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது.

கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகையால் கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் போலீசாரும், வருவாய்துறையினரும் கடுமையாக சோதனையில் இறங்கி உள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக கருமத்தம்பட்டியில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சோதனை சாவடி அமைத்து வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இன்று காலை ராஜஸ்தானில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் இருந்த 30 பேரின் இ பாஸ்களை வாங்கி சோதனை செய்தனர். அப்போது அவை அனைத்தும் போலி என தெரிந்தது. இதனையடுத்து, அவர்களை கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள் பேருந்தையும் பறிமுதல் செய்தனர்.