பரிமலை

கொரோனா கட்டுப்பாடு காரணமாகச் சபரிமலைக்குப் பக்தர்கள் வருகை மிகவும் குறைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தொடங்கியதும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்ல மாலை அணிந்து விரதம் இருந்து மலைக்குச் செல்வது வழக்கமாகும்.  இதற்காகப் பயணத்துக்கு ஓரிரு மாதம் முன்பே பலரும் வேன் மற்றும் பேருந்துகளை டிராவல்ஸ் நிறுவனங்களிடம் புக் செய்வார்கள்.

இதையொட்டி நவம்பர் முதல் ஜனவரி வரை டிராவல்ஸ் நிறுவனங்கள் மிகவும் பிசியாக இருப்பது வழக்கமாகும்.  தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சபரிமலை பக்தர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.  இதனால் பக்தர்கள் வராமல் சபரிமலை களை இழந்து காணப்படுகிறது.

அத்துடன் பக்தர்கள் வராததால் சபரிமலைக்கு வரும் பேருந்துகள் மற்றும் வேன்களின் எண்ணிக்கையும் மிக மிகக் குறைந்துள்ளன.  வழக்கமாக புக் செய்யப்படும் அளவில் சுமார் 5% க்கும் குறைவாகவே புக் ஆகி உள்ளதாக டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான டிராவ்லஸ் உரிமையாளர்கள் தங்களது ஆண்டு வருமானம் சபரிமலை பக்தர்களை நம்பி உள்ளதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையில் உள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.  எனவே பக்தர்கள் அனுமதி எண்ணிக்கையை மேலும் அதிகரித்தால் தங்களுக்கு வருமானம் கிடைக்கும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.