டில்லி

இத்தாலி மற்றும் கொரியா நாடுகளில் இருந்து வருவோர் அவசியம் மருத்துவ சான்றிதழ் அளிக்க வேண்டும் என இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது.   சீனாவுக்கு அடுத்தபடியாக  இத்தாலி மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் இந்த பாதிப்பு அதிக அளவில் உள்ளது.   சீனா முதல் இடத்திலும் இத்தாலி இரண்டாம் இடத்திலும் கொரியா மூன்றாம் இடத்திலும் உள்ளன.

இந்த வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உள்ளது.  இதுவரை சுமார் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதனால் நாடெங்கும் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று முதல் இத்தாலி, கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோர் தங்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என மருத்துவ சான்றிதழுடன் வந்தால் மட்டுமே நாட்டினுள் அனுமதிக்கப்படுவர்” எனத் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த சான்றிதழ் சம்பந்தப் பட்ட அரசின் சுகாதாரத் துறையால்  அங்கீகாரம் பெறப்பட்ட  சோதனைச் சாலையில் இருந்து அளிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.