டில்லி

வெளிநாடு செல்வது என்பது நியாயமான மற்றும் மக்களின் அடிப்படை உரிமை ஆகும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சதிஷ் சந்திர வர்மா என்னும் காவல் துறை ஐஜி கோவையில் உள்ள காவல்துறை பயிற்சிப் பள்ளியில் முதல்வராக பணி புரிந்து வருகிறார். அவர் மீது துறை சம்பந்தமான ஒரு விசாரணை நிலுவையில் உள்ளது. அந்த விசாரணையில் எவ்வித குற்றவியல் நிகழ்வுகளும் இடம் பெறவில்லை. இந்நிலையில் சதிஷ் சந்திர வர்மாவின் உறவினர்களை காண அவர் வெளிநாடு செல்ல திட்டமிட்டார்.

ஆனால் சதீஷ் மீதான விசாரணை நிலுவையில் இருந்ததால் அவருக்கு அனுமதி மறுக்கபட்டது. அவர் மேலதிகாரிகளிடம் தன்மீது எந்த ஒரு குற்றவியல் புகாரும் கிடையாது என கூறி உள்ளார். ஆயினும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றமும் அவர் வெளிநாடு செல்ல அனுமதி வழங்க மறுத்து விட்டன.

அதை ஒட்டி வெளிநாடு செல்வது தமது உரிமை எனக் கோரி சதீஷ் சந்திர வர்மா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் இன்று நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், “வெளிநாடு செல்வது என்பது அடிப்படை மனித உரிமையாகும். அதை கரணமில்லாமல் தடுப்பது மிகவும் தவறானதாகும். ஆகவே அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.