திருவனந்தபுரம்: கொரோனா எதிரொலியாக வேறொரு மாநிலம் அல்லது சர்வதேச நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு என சில முக்கிய விதிமுறைகளை கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த 2 நாட்களாக புதிய கொரோனா பாதிப்புகள் இல்லாத நிலையில் மாநிலங்களுக்கு இடையே மற்றும் சர்வதேச பயணிகளின் வருகையால், கொரோனா வைரஸ் நோயாளிகள் அதிகரிப்பு மீண்டும் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் கடந்த 3 நாட்களில் 16 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 11 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். மற்றவர்கள் அண்டை மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று முதலமைச்சர் பினராயி விஜயன் குறிப்பிட்ட ஒரு நாள் கழித்து இந்த பாதிப்புகள் பதிவாகி இருக்கின்றன. எதிர்வரும் நாட்களில் வெளிநாடுகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் அதிகமான மக்கள் கேரளாவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இதைத் தடுக்க முடியாது. ஆனால் பயணிகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை கேரளா அறிவித்துள்ளது. கேரளாவில் உள்ள மாவட்டங்களுக்கிடையே, மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் சர்வதேச பயணிகளுக்கான விதிமுறைகளில் சில நடைமுறைகளை வரையறுத்து உள்ளன.
தினசரி மாவட்டங்களுக்கு இடையேயான பயணங்களை மேற்கொள்ள வேண்டியவர்கள் கேரள காவல்துறையின் போர்ட்டலில் பதிவு செய்வதன் மூலம் பயண பாஸ் பெறலாம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு சென்று அங்குள்ள அதிகாரிகள் மூலம் நேரடியாக பாஸ் பெறலாம்.
ஆனால் தற்போது மாவட்டங்களுக்கு இடையேயான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை முறைகள் எதுவும் இல்லை. ஆகையால் பயணிக்கும் அத்தகைய நபர்கள் பயண பாஸ் மட்டும் வைத்திருந்தால் போதும். வேறு எந்த மருத்துவ பரிசோதனை அறிக்கையும் வைத்திருக்க வேண்டியது இல்லை.
மாநிலங்களுக்கு இடையேயான பயணத்துக்காக, பாலக்காட்டில் வாளையார், காசர்கோடு மஞ்சேஸ்வர், வயநாட்டில் முத்தங்கா, திருவனந்தபுரத்தில் இஞ்சிவிலா, கொல்லத்தில் ஆரியங்காவ் ஆகிய 6 இடங்களில் கேரளா மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளை திறந்துள்ளது.
கேரளா வழங்கிய இ-பாஸ்கள் கிடைத்தால் மட்டுமே மக்கள் மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். 6 மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளிலும், மக்கள் உள்ளே நுழைவதற்கு முன்பாக பரிசோதிக்கப்படுவார்கள். கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
எந்தவொரு பயணிக்கும் இருமல், சளி, காய்ச்சல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். உடனடியாக அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.
கொரோனா பாசிட்டிவ் என்றால் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தப்படுவார்கள். நெகட்டிவ் என்றால் பயணிகள் கட்டாயமாக 14 நாள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வசதிகள் இல்லாதவர்கள் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு மாற்றப்படுவார்கள். வெளிநாடுகளில் இருந்து வரும்  சர்வதேச பயணிகள் நேரடியாக வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அறிகுறிகள் இருந்தால் அவர்கள் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பராமரிப்பு மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவார்கள். கர்ப்பிணிப் பெண்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் விமான நிலையத்தில் சோதனையின் போது நெகட்டிவ் என்று வந்தால் நேரடியாக வீட்டு தனிமைப்படுத்தலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
அறிகுறிகள் இல்லாத மற்றவர்கள் அனைவரும் அரசு ஒதுக்கிய மையங்களில் குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு நிறுவன தனிமைப்படுத்தலுக்கு உட்படுவார்கள். தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில், அனைவருக்கும் RT-PCR சோதனைகள் 7ம் நாள் முடிவில் நடத்தப்படும். பணம் செலுத்தத் தயாராக இருப்பவர்களுக்கு அதற்கேற்ப தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளையும் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.