மூத்த பத்திரிகையாளர்  பா. ஏகலைவன் அவர்களின் முகநூல் பதிவு:

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்

“தமிழருவி மணியன் அவர்களுக்கு என்ன ஆனது?   ஏன் இந்த புலம்பு புலம்புகிறார்? எந்த ஊடகத்தை பார்த்தாலும் அழுகாச்சி..    என்ன ஆனது அவருக்கு?
மக்களை திருத்த முடியாது என்கிறார். 18 வயதில் பொது வாழ்க்கைக்கு வந்தேன். 48 ஆண்டுகள் கடந்துவிட்டது. இப்போது 67 வயதாகிறது. இதற்குமேலும் முடியவில்லை. கால்கள் தளர்ந்துபோய்விட்டது. மனது சோர்ந்து போய்விட்டது என்கிறார்.
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை ஒப்புக்கொள்கிறார்.
சரி. அப்படி என்ன களப்பணி ஆற்றிவிட்டீர்கள்… எழுதியிருக்கிறீர்கள்… பேசியிருக்கிறீர்கள்… மக்களோடு சேர்ந்த களப்பணி எங்கே செய்தீர்கள்?
திடீர் என்று கட்சி ஆரம்பித்தீர்கள்;  தேர்தலில் குதித்தீர்கள்; மக்கள் உடனே உங்களை ஏற்றுக்கொண்டு வாக்குகளை போட வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?  ஏன் இந்த சோர்வை ஊடகம் தோறும் கொட்டித்தீர்க்கிறீர்கள்.
நல்லகண்ணு
நல்லகண்ணு

நல்லகண்ணு ஐயாவை அறிவீர்கள்தானே. (அப்படி கேட்க வேண்டியிருக்கிறது). இப்போது என்ன வயது தெரியுமா அவருக்கு?  93 வயது. எத்தனை முறை சட்டமன்ற உறுப்பினர் ஆனார். எத்தனை முறை எம்.பி. ஆனார்.? மக்கள் அப்படி நினைத்து வாக்களித்து தேர்ந்தெடுத்துவிட்டார்களா என்ன? அவரை எல்லாம் புறக்கணிப்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு!
அந்த மனிதர் என்ன, ‘மக்கள் திருந்தவே மாட்டார்கள்’ என்று கூறி புலம்பிக்கொண்டு, இனி அரசியல் வாழ்க்கையே வேண்டாம் என்றா ஒதுங்கிக்கொண்டார்?  93 வயதய்யா அவருக்கு. இன்றும் இந்த மக்களுக்காக ஆற்றங்கரைக்கும் நீதிமன்றத்திற்கும் ஒடிக்கொண்டிருக்கிறாரே. அவர் மனிதரா? நீங்கள் மனிதாரா?
பழ.நெடுமாறன் தெரியும்தானே. இப்போது 82 வயதாகிறது. உங்களை விட உடல் தளர்ந்து போனவர்தான். இனத்திற்கான அவரது போராட்டக்களம் இருண்ட காலத்தைக் கொண்டது. இனத்திற்காக நீண்ட சிறைவாசம். ஆனாலும் , ‘நான் செய்தது சிறு தியாகம்தான்’ என பெருந்தன்மையாக சொன்னார்.
அப்படிப்பட்டவரை மக்கள் ஒரு சட்டமன்ற உறுப்பினராககூட தேர்ந்தெடுக்கவில்லையே. என்ன அங்கீகாரத்தை கொடுத்தார்கள்.? ஒன்றுமேயில்லை. ஆனால், ‘இந்த மக்களை திருத்தவே முடியாது.’ என்று ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கவில்லையே பழ.நெடுமாறன். அரசியலே வேண்டாம் என்று ஓடவில்லையே. அப்படி சொல்லி ஊடகம்தோறும் போய் மனச்சோர்வை பற்றவைக்க இல்லை.
ஆனால் ஒரு மாத சிறைவாழ்க்கையைகூட மக்களுக்காக அனுபவிக்காத நீங்கள் உடனடியான அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது எப்படி?
கம்யூனிஸ்ட்டுகள் என்ன யுகப்புரட்சியா செய்துவிட்டார்கள் என்கிறீர்கள். சரி நீங்கள் என்ன யுகப்புரட்சியை செய்தீர்கள் என்ற கேள்வி திரும்ப வருமல்லவா?
குறைந்த பட்சம் கம்யூனிஸ்ட்டுகளின் புரட்சியில் ஒரு சதவீதமும் செய்யாத உங்களை மக்கள் எப்படி அங்கீகரிப்பார்கள்.? முதல் முயற்சிதானே இது. அதனாலென்ன என்று அடுத்தகட்டத்திற்கு போக வேண்டியதுதானே. அதைவிடுத்து ஏனிந்த சோகப்பாட்டு.?
எழுத நிறைய இருக்கிறது. உங்களது நேர்காணல்களிலும் நிறைய முரண்பாடு.
கம்யூனிஸ்ட்டுகள் என்ன யுகப்புரட்சியையா செய்துவிட்டார்கள் என்று கேட்கும் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்.?
குறைந்த பட்சம் நீதிமன்றம் சென்றிருக்கலாம். தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை கேள்வி கேட்கலாம். அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஒரே சின்னம். பகல் கொள்ளை, இரவுக்கொள்ளை என அடித்து வைத்த பெரும்பணம், அதிகார பலம் வைத்திருக்கும் இரு கட்சியோடு, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என தேர்தல் களத்திற்கு வரும் ஒரு சாமானியன் அல்லது சாமானிய கட்சி எப்படி போட்டியிட்டு வெற்றி பெற முடியும். இது என்ன வகையான ‘ஜனநாயக தேர்தல்’ என்று கேள்வி கேட்டிருக்க வேண்டாமா?. கேட்டிருக்க வேண்டும்.
பழ. நெடுமாறன்
பழ. நெடுமாறன்

உங்களைப் போன்ற அறிவு ஜீவிகளே தேர்தல் ஆணையத்தின் குருட்டுக் கண்களை குணமாக்க முடியாது போனால் வேறு யாரால் செய்ய முடியும் என்றல்லவா நினைத்திருக்க வேண்டும். அப்படி அல்லவா நீதிமன்றம் சென்றிருக்க வேண்டும். மாற்றம் இந்த தேர்தல் அமைப்பில் இருந்துதானே தொடங்க வேண்டும் என்று கேட்டிருக்க வேண்டாமா? போராடியிருக்க வேண்டாமா? அப்படி எந்த முயற்சியும் எடுக்காத நீங்கள், கம்யூனிஸ்ட்டுகள் என்ன யுகப்புரட்சியா செய்துவிட்டார்கள் என கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது.
இப்போது அரசியலுக்கு வந்து 234 தொகுதிக்கும் ஓடியோடி கத்தோ கத்தென்று பிரச்சாரம் செய்த சீமான், உங்கள் பாணியில் சொல்வதென்றால் சின்ன பையன், ‘அய்யோ எங்களை அங்கீகரிக்கவில்லை. அரசியலே வேண்டாம்’ என்று ஓடவில்லை. வென்றால் மகிழ்ச்சி. தோற்றால் பயிற்சி என்று இன்னும் வேகமாக ஓடுவேன் என்கிறார்.
ஆனால் 48 ஆ….ண்டுகால அரசியல் அனுபவத்தைக் கொண்ட நீங்கள்…?.
எழுத நிறைய இருக்கிறது. வேண்டாம். இனியாவது மக்களை குறை சொல்வதை நிறுந்துங்கள். அரசியல் வேண்டாமா, ஒதுங்கியிருங்கள். மனச்சோர்வான ஆட்களை உடன் வைத்துக்கொண்டு பயணிப்பது தற்கொலைக்குச் சமம் என்பார்கள்.
பேச்சும் எழுத்தும் மட்டுமே அரசியலாகி விடாது. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது….!”