200பேர் மீது முறைகேடு புகார்: ஆனால், 8பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கோட்டையன் தகவல்

சென்னை:

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்பட்ட,  தகுதி தேர்வு எழுதியவர்களில் 200 பேர்களின் விடைத்தாள்களில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொண்ட நிலையில், முறைகேடுகளில் ஈடுபட்டதாக தெரிய வரும்  192 பேரில் 8 பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

192 பேர் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளதை ஒத்துக்கொண்ட அமைச்சர் அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்காமல் குறிப்பிட்ட 8 பேர் மீது மட்டும் நடவடிக்கை பாயும் என்று கூறியிருப்பது தகுதி தேர்வு எழுதியோர் மத்தியில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டந்த 2017ம் ஆண்டு ஆண்டு ஏப்ரல் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை  7 லட்சத்து 53 ஆயிரம் பேர்  எழுதினார்கள். அவர்களில் 34 ஆயிரத்து 979 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக புகார் கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து,  தேர்வு விடைத்தாள்கள் மீண்டும் திருத்தப்பட்டு, அது ஒவ்வொருவரின் விடைத்தாளும்   ஸ்கேன் செய்து   இணைய தளத்தில் பதிவேற்றி வெளியிடப்பட்டது.

இதில், முதலில் வெளியான தேர்வு முடிவுகள்  பட்டியலுக்கும், மீண்டும் திருத்தப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்ட பட்டியலுக்கும் வித்தியாசம் காணப்பட்டது. இதை ஆய்வு செய்தபோது, விடுபட்ட 200 ஆசிரியர்களுக்கும்  போலி மதிப்பெண்களை வழங்கப்பட்டு, அவர்களின் தேர்வு முடிவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

இது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முறைகேடுகளில் ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமேயன்றி குறிப்பிட்ட 8 பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.