நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு

ன்று காலை கைது செய்யப்பட்ட நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நக்கீரன் வாரமிருமுறை ஆசிரியர் ஆர்.ஆர்.கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து காவல்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளார். அவரிடம்  காவலர்கள் விசாரணை செய்து வருகிறார்கள். அது முடிந்ததும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்று தெரிகிறது.

 

மாணவிகளை பாலியல் முறைகேடுகளில் ஈடுபட  நிர்ப்பந்தப்படுத்திய வழக்கில் கைதானவர் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி. இவர் குறித்து நக்கீரன் இதழில் செய்தி வெளியானது. அதில், ஆளுநரை தான் நான்குமுறை சந்தித்ததாக நிர்மலா தேவி கூறியதாக இடம் பெற்றிருந்தது. இதையடுத்து நக்கீரன் மீது ஆளுநர் மாளிகை புகார் கொடுத்தது. அந்த புகாரின் பேரில்தான் காவல்துறை கோபாலைக் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது கோபால் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.  பிரிவு 124A கீழ், ( இராஜ துரோக குற்றம் – இந்திய தண்டனைச் சட்டம் 1860) வழக்கு பதியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சட்டபூர்வமாக இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்பையும் விரோத உணர்ச்சியையும் தூண்டி விடுவதற்காக எழுத்தால் பேச்சால் ஜாடையால், படத்தால் அல்லது வேறு எந்த விதமாகவாது காரியம் ஆற்றுவது குற்றம் என்று கூறுகிறது இந்த பிரிவு.

இந்த குற்றம் புரிபவர்களுக்கு ஆயுள் தண்டனையுடன் அபராதவும் விதிக்கப்படலாம் அல்லது மூன்று வருட சிறைக்காவலும் அபராதவும் விதிக்கப்படும்.