கொரோனாவுக்கு சிகிச்சை: யார் யாரெல்லாம் பிளாஸ்மா தானம் செய்யலாம்… தமிழகஅரசு

சென்னை:

மிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டு உள்ளார்.  யார் யாரெல்லாம் பிளாஸ்மா தானம் செய்யலாம் என்ற வழிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளது.

பிளாஸ்மா தெரபி மூலம் தமிழகத்தில் இதுவரை 18 பேர் குணமடைந்து உள்ளனர். சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சோதனை முறையில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் பலர் குணமடைந்த நிலையில், தற்போது பிளாஸ்மா தெரபி குறித்து தமிழகஅரசு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கொரோனா தொற்றை குணப்படுத்துவதற்கோ, தடுப்பதற்கோ மருந்துகள் ஏதும் இல்லாத சூழலில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து அதனை கரோனா நோயாளிகளுக்கு செலுத்தி சோதனை அடிப்படையில் நோயை குணப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க தமிழக முதல்வர்  உத்தரவிட்டுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து பிளாஸ்மா தொடர்பான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) மற்றும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாடு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) ஆகியவற்றிடம் தமிழ்நாடு அரசு அனுமதி பெற்றது.

உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 20 நபர்களுக்கு சோதனை முறையில் பிளாஸ்மா தெரபி அளிக்கப்பட்டு இதுவரை 18 நபர்கள் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கோவிட் தொற்று நோயிலிருந்து குணமடைந்த நோயாளிகளிடமிருந்து ரத்த கூறுகளை தனியாக பிரித்தெடுக்கும் கருவியின் மூலம் 500 மி.லி பிளாஸ்மா பெறப்பட்டு நோயின் தன்மை மிதமாக உள்ள கோவிட் நோயாளிகளுக்கு பிளாஸ்மா வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பிளாஸ்மா தானம் செய்பவர்கள் 18-65 வயது உடையவர்களாக இருக்க வேண்டும்.

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சை முடிந்து குணமடைந்த பின்னர் எடுக்கப்படும் பரிசோதனையில் எதிர்மறையான பரிசோதனை முடிவு பெறப்பட்ட நாளிலிருந்து 14-வது நாள் பிளாஸ்மா தானம் செய்வதற்கு தகுதி உடையவர்கள்.

உயர் இரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், இருதய நோய், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், சிறுநீரக நோய், புற்றுநோய் போன்ற பிற நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க இயலாது.

பிளாஸ்மா தானம் செய்ய முன்வருபவர்களுக்கு உரிய பரிசோதனை மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அளவிடப்பட்டு தகுதியான கொடையாளர்களிடமிருந்து அதிகபட்சமாக 500 மி.லி பிளாஸ்மா எடுக்கப்படுகிறது.  இதற்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

ஒரு முறை பிளாஸ்மா தானம் செய்தவர் 28 நாட்கள் இடைவெளி விட்டு 2-வது முறை தானம் அளிக்கலாம்.

ஒரு நபர் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே பிளாஸ்மா தானம் வழங்க இயலும்.

தானமாக பெறப்பட்ட பிளாஸ்மா -40 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் ஓராண்டு வரை பாதுகாக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம்.

கோவிட்-19 நோய் தொற்று கண்டவர்களுக்கு ஸ்டீராய்டு மற்றும் இதர மருந்துகள் பலனளிக்காத போதும், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை தொடர்ந்து அதிகரிக்கும் பொழுது, பிளாஸ்மா தெரபி அளிப்பதன் மூலம் நோயிலிருந்து குணமடைவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு தலா 200 மி.லி வீதம் பிளாஸ்மா செலுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு செலுத்தப்படும் பிளாஸ்மா நோயாளிகளின் உடலில் இருக்கும் கரோனா வைரசின் செயல்பாட்டை நடுநிலை ஆக்கி வைரஸ் எண்ணிக்கையும் குறைத்து கோவிட் நோயாளிகள் செயற்கை ஆக்சிஜன் தேவையை குறைக்க உதவுகிறது.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியினை ரூ.2 கோடி மதிப்பீட்டில் நிறுவ துரித நடவடிக்கையினை அரசுமேற்கொண்டுள்ளது.

இவ்வாறு அமையவிருக்கும் பிளாஸ்மா வங்கியானது, தில்லிக்கு அடுத்தப்படியாக இந்தியாவிலேயே 2-வது பிளாஸ்மா வங்கியாக அமையும்.

இதே போல ஐ.சி.எம்.ஆர் ஒப்புதலுடன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் ஒரு நபருக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டு குணமடைந்துள்ளார்.

மேலும், திருநெல்வேலியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த ஆராய்ச்சி வெகு விரைவில் மேற்கொள்ளப்படும்.

மத்திய அரசின் மருந்து கட்டுப்பாடு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, Aphaeresis கருவியின் உரிமம் பெற்ற இரத்த வங்கிகள் பிளாஸ்மா தானம் பெறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

இதன் மூலம், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலும் விரைவில் பிளாஸ்மா தானம் பெறப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளது.

கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிளாஸ்மா சிகிச்சை வழங்க தகுதியானவர்கள் எவ்வித தயக்கமும் பயமும் இல்லாமல் தாமாக முன்வந்து பிளாஸ்மா தானம் செய்யும்பொழுது உலகளாவிய இந்த கோவிட் தொற்று உள்ள நிலையில் இது ஓர் உயிர்காக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி