மேகமலையில் அனுமதியின்றி அதிகளவு பயணியர் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் டிரெக்கிங் செல்வதும் அதிகரித்துள்ளதால், மீண்டும் குரங்கணி போன்ற சம்பவம் நடக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தேனி மாவட்டத்தில், மேகமலை வனவிலங்குகள் சரணாலயம் 786 சதுர கிமீ வனப்பரப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள பல நூறு கோடி மதிப்புள்ள அரிய வகை மரங்கள் வெட்டி கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. ஒருபுறம் வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், மறைமுகமாக கடத்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இயற்கை வளம் கொழிக்கும் இந்த வனப்பகுதியில், தற்போது புதிய அபாயம் உருவாகி உள்ளது.

54 கிமீ தூரத்தில் சாலைமேகமலை வனப்பகுதியில் ைஹவேவிஸ் பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சிக்குள் ஹைவேவிஸ், மேகமலை, மணலாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு, மேல்மணலாறு, வெண்ணியாறு என 7 கிராமங்கள் உள்ளன. 4,800 பொதுமக்கள் வசிக்கின்றனர். இவர்கள் இங்குள்ள எஸ்டேட்களில் வசிக்கின்றனர். எஸ்டேட் நிர்வாகம் சார்பில் இவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னமனூர் நகராட்சியில் இருந்து ைஹவேவிஸ் பேரூராட்சி வரை 54 கிமீ தூரம் ரூ.100 கோடி செலவில் ரோடு அமைக்கப்பட்டது. இதன் பின்னர் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.அனுமதியின்றி விடுதிஏழு கிராமங்கள் மட்டுமின்றி கடானா, மணலாறு, அத்துவான் போன்ற அடர்ந்த வனப்பகுதிகளிலும் (மிகவும் அடர்ந்த வனப்பகுதிகள்) புதிதாக தங்கும் விடுதிகள் ஏராளமாக கட்டப்பட்டு வருகின்றன. பலர் விடுதிகளை கட்டி முடித்துள்ளனர். பலர் விடுதிகளை கட்டி வருகின்றனர். வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனப்பகுதிகளுக்குள் பயணியர் விடுதிகள் கட்ட பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதி வாங்க வேண்டும்.

மேலும், கட்டிட அனுமதி, கட்டுமான வலுத்திறன், சுகாதாரத்துறை, உணவுப்பாதுகாப்புத்துறை உட்பட பல்வேறு அரசுத்துறைகளின் அனுமதி அவசியம். ஆனால் இந்த பயணியர் விடுதிகள் எந்தவித அனுமதியும் இல்லாமல் கட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மேகமலை வன உயிரின சரணாலய காப்பாளர் போஸ்லெ சச்சின் துக்கரொ, ‘‘இந்த பிரச்னை எங்கள் கவனத்திற்கும் வந்தது. வனப்பகுதிகளை ஒட்டித்தான் புதிய கட்டிடங்கள் உருவாகின்றன. இவர்கள் யாரிடம் அனுமதி வாங்குகின்றனர் என்பது தெரியவில்லை. வனத்திற்குள் கட்டினால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இவர்கள் வனத்தை ஒட்டிய இடங்களில் கட்டுகின்றனர். பலர் எந்த அனுமதியுமின்றியும் கட்டுவதாக எங்களுக்கும் புகார் வந்துள்ளது.  தவிர சுற்றுலாப்பயணிகளை உயரமான மலைத்தொடர்கள் அமைந்துள்ள மகாராஜாமெட்டு, இரவங்கலாறு பகுதிகளில் உள்ள வியூ பாயிண்ட்டிற்கு அனுமதியின்றி அழைத்துச் செல்கின்றனர். இது மிகவும் அபாயகரமான விஷயம். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்’’ என்று தெரிவித்தார்.