துபாய்:

சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் கூட்டணி அமைப்பது   அவர்களது உரிமை என்றும், அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் மீது தான் பெரும் மதிப்பு வைத்திருப்பதாகவும் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


உத்திரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி 38 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 38 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளன. மீதமுள்ள 4 தொகுதிகள் காங்கிரஸுக்கும் ஏனைய கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியிலும், சோனியா காந்தி போட்டியிடும் ரேபரலி தொகுதியிலும் போட்டியிடமாட்டோம் என இரு கட்சித் தலைவர்களும் அறிவித்துள்ளனர்.

இது குறித்து அவர் துபாயில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “2019-ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் உத்திரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்திருப்பது அரசியல் முடிவு. அது அவர்களின் உரிமை.

இரு தலைவர்கள் மீதும் நான் பெரும் மதிப்பு வைத்துள்ளேன். உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை எப்படி வலுப்படுத்துவது என்பது பற்றி எங்களுக்குத் தெரியும்.

முழு பலத்துடன் அம்மாநிலத்தில் வலுப்பெற நாங்கள் போராடுவோம்” என்றார்.
.