கோவாக்சின் செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளனர்: எஸ்ஆர்எம் பல்கலை. தகவல்

சென்னை: கொரோனா தடுப்பூசி கோவாக்சின் செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளதாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. தற்போது அதற்கான தீர்வு காணும் விதமாக தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளை விட இந்தியா தடுப்பூசி கண்டுபிடிக்க ஆர்வமாக உள்ளது. இந் நிலையில் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர், தேசிய வைரலாஜி நிறுவனம் (NIV) ஆகியவற்றுடன் இணைந்து கோவாக்ஸின் என்ற கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது.

கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள, சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 13 மருத்துமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எஸ்ஆர்எம் பல்கலைக்கழக முதன்மை ஆய்வாளர் சத்யஜித் மோகாபாத்ரா கூறி இருப்பதாவது: கொரோனா தடுப்பூசி கோவாக்சின் செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளனர். கோவாக்சின் பரிசோதனை 6 மாதம் வரை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது: 18 வயது முதல் 55 வயது உள்ள 375 தன்னார்வலர்கள் நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 2 தன்னார்வலர்களுக்கு 0.5 மிலி தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு உள்ளது என்றார்.

இது குறித்து முதல்வர் சுந்தரம் கூறியதாவது: தன்னார்வலர்கள் முறையே 28,42, 104 மற்றும் 194 நாட்களில் அவர்களின் நிலைமை என்ன என்பது தெரியவரும். முதல் கட்ட சோதனை இப்போது நடைமுறையில் உள்ளது. விரைவில் 2ம் கட்ட சோதனைகள் தொடங்கும் என்றார்.