சென்னை வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் வழித்தடம்: நாளை முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் நிறுவனம் நாளை முதல் சோதனை ஓட்டம் நடத்துகிறது.

சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலும், பரங்கிமலை முதல் சென்னை ரயில் நிலையம் வரையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே ரூ. 3,770 கோடியில் 9 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன.

இந்த வழித்தடத்தில் சிக்னல்கள் மற்றும் மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதை முன்னிட்டு, இந்த பாதையில் நாளை முதல் டீசல் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடக்கிறது. பின்னர் ஒவ்வொரு முறையும் ரயில்களை இயக்குவதன் மூலம் சிக்னல்களை அதிகாரிகள் சோதிப்பர்.

பின்னர் ஜனவரி 2வது வாரத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர், அதிவேகமாக மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை நடத்துவார் என்று தெரிகிறது. பயணிகள் ரயில் இயக்க அனுமதி கிடைத்ததும் ஜனவரி இறுதிக்குள் வண்ணாரப்பேட்டை – திருவொற்றியூர் – விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்தை துவங்க மெட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.