ஆதிவாசி சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் : அதிர்ச்சி தகவல்

சித்ரகூட்,  உத்தரப்பிரதேசம்

த்தரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் பகுதியில் ரூ.150 மற்றும் ரூ,200 க்காக பழங்குடி சிறுமிகள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.

கொடிது கொடிது வறுமை கொடிது அதிலும் கொடிது இளமையில் வறுமை என ஔவையார் பாடி விட்டுச் சென்று விட்டார்.  அது இன்றளவும் உண்மையாக உள்ளது.  குறிப்பாக வறுமையில் உள்ளவர் சிறுமிகளாகவும் பழங்குடியினராகவும் இருந்து விட்டால் பாலியல் அத்துமீறல் சகஜமாகி வருகிறது.   இத்தகைய நிகழ்வுகள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடப்பது தற்போது வெளிவந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநில புந்தல்கண்ட் மாவட்டத்தில் உள்ள சித்ரகூட் என்னும் ஊர் லக்னோவில் இருந்து சுமார் 700 கிமீ தூரத்தில் உள்ளன.  இங்கு ஏராளமான சட்டவிரோத சுரங்கங்கள் உள்ளன.  ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த பழங்குடியினர் வீட்டுச் சிறுமிகள் இங்குப் பணி புரிய அமர்த்தப்பட்டுள்ளனர்.  இவர்களுக்குத் தினக் கூலியாக ரூ.150 முதல் ரூ.200 வரை அளிப்பதாகக் கூறி அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அந்த கூலியை வாங்க இந்த சிறுமிகள் ஒப்பந்ததாரர்கள் மற்றும் இடைத் தரகர்களுடன் படுக்கையை பகிரும் அவலம் உள்ளது.  சுமார் 12 முதல் 14 வயது வரையிலான இந்த சிறுமிகள் தாங்கள் பணியில் சேரும்போதே இதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்னும் நிபந்தனையுடன் சேர்க்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.  தாங்கள் பல முறை மிரட்டல் மற்றும் அதிகப் பண ஆசையை காட்டி பலாத்காரம் செய்யப்படுவதாகச் சிறுமிகள் கூறி உள்ளனர்.

மேலும் தங்களுடைய இச்சைக்கு இணங்காத பெண்களை மலையில் இருந்து வீசி விடுவதாக மிரட்டல் விடுத்தும் ஒரு சில பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.    இது குறித்து இந்த சிறுமிகளின் பெற்றோருக்குத் தெரியும் என்றாலும் அவர்களும் வயிற்றுப் பிழைப்புக்காக எதிர்க்க முடியாத நிலையில் உள்ளது பரிதாபமாகும்.

இந்த சுரங்கங்களுக்கு அருகே மலையின் பின்புறத்தில் பல படுக்கைகள் போடப்பட்டு சிறுமிகளை வரிசையில் நிற்க வைத்து ஒவ்வொருவராக அழைத்து தங்கள் இச்சைகளை முதலாளிகள் தீர்த்துக் கொள்வார்களாம்.   யாரவது முரண்டு பிடித்தால் அடி உதை தானாம்.   அம்மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து ஆர்வலர்கள் புகார் அளித்துள்ள நிலையில் விசாரணை நடத்துவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.