பாஸ்டாசா

பழங்குடியினர் தொடர்ந்த வழக்கில் அமேசான் காடுகளில் எண்ணெய் கிணறு தோண்ட பாஸ்டாசா நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உலகின் மிகப் பெரிய மழைக்காடான அமேசான் காடுகளுக்குள் ஒன்பது நாடுகள் அடங்கி உள்ளன. உலகின் மிகவும் அடர்ந்த காடான இந்த காட்டுப் பகுதிகளில் பல வகை அரிய மரங்கள், மற்றும் விலங்குகள் காணப்படுகின்றன. அது மட்டுமின்றி உலகின் மிகவும் பழமையான இன மக்களும் இங்கு வசித்து வருகின்றனர். உதாரணமாக இந்த காடுகளில் உள்ள பாஸ்டாசா என்னும் பகுதியில் வாவ்ரானி என்னும் பழங்குடியினர் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர்.

இங்கு எண்ணெய் வளம் ஏராளமாக உள்ளதால் பல எண்ணெய் நிறுவனங்கள் அமேசான் காடுகளை குறி வைத்தன. இதற்கு ஈக்குவடோரியன் அரசும் உதவ முன் வந்தது. இதற்காக அரசுக்கு ஏராளமான லஞ்சம் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான எவ்வித சான்றும் இல்லை. இந்த எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அளிக்க இருந்த நிலம் பாஸ்டாசா பகுதியில் உள்ள வாவ்ரானி இனத்தவர் வசித்து வரும் நிலமாகும்.

இதை ஒட்டி இந்த பழங்குடியினர் அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தங்கள் வழக்கில் பல தலைமுறைகளாக தாங்கள் வசித்து வரும் வனப் பகுதியை அரசு என்ணெய் நிறுவனத்துக்கு குத்தகைக்கு அளிப்பதால் தங்கள் வாழ்வாதாரம் அழியும் எனவும், வனப்பகுதிக்கு கடும் அழிவு ஏற்படும் எனவும் பழங்குடியினர் தெரிவித்தனர். அரசு தரப்பில் அங்கு வெறும் சோதனை மட்டும் நடத்த உள்ளதாகவும் ஏற்கனவே இது போல சோதனை 2012 ல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரசின் கருத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இந்த பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளின் பிரிவின் கீழ் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருவதையும் பழங்குடியினரின் வாழ்வாதாரம் இப்பகுதியை நம்பி உள்ளதாலும் எண்ணெய் கிணறுகள் தோண்ட அரசுக்கு தடை விதிக்கப்பட்டது. இது பழங்குடியினருக்கு மட்டுமின்றி சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த தீர்ப்பின் மூலம் சுமார் 5 லட்சம் ஏக்கர் காடுகள் காப்பாற்றப்பட்டுள்ளன.