ஆழ்துறை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்தின் தாய்க்கு அரசு வேலை அளிப்பது குறித்து எந்த வாக்குறுதியையும் தாம் அளிக்கவில்லை என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராஜு தெரிவித்துள்ளார்.

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஆரோக்கிய ராஜ் – கலாராணி தம்பதி. இவர்களது இரண்டாவது மகன் சுஜீத் வில்சன். அக்டோபர் 25ம் தேதி வீட்டருகே உள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். நான்கு நாட்கள் நடந்த மீட்பு முயற்சிக்கு பின் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான். சிறுவனின் குடும்பத்துக்கு தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது. சிறுவனின் தாய் கலாராணிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. இதையடுத்து கலாராணிக்கு அரசு வேலை வழங்கப்படும் என திருச்சி கலெக்டர் சிவராசு உறுதி அளித்ததாக தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராஜு, “சுஜித்தின் தாய் கலாராணிக்கு நான் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறவில்லை. அவர் அரசு வேலை கேட்டு கோரிக்கை விடுத்திருந்தார். 12ம் வகுப்பு வரை முடித்துள்ளார் என்பதால் அதை பரிசீலிப்போம் என்றே கூறியிருந்தேன். ஊடக செய்திகளில் அவை தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு விட்டது. அரசு பரிசீலித்து தான் எதையும் செய்யும். அரசு அதிகாரியாக அவர்கள் வைத்த கோரிக்கைக்கு பரிசீலிக்கின்றேன் என்றே கூறினேன். நான் இதுவரை வாக்குறுதி எதுவும் அளிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.