திருச்சி: திருச்சியில் பிரபலமான காந்தி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக திருச்சியில் பிரபலமான காந்தி சந்தை மூடப்பட்டுள்ளது. பொன்மலை ஜி கார்னர் பகுதியில் தற்காலிகச் சந்தை செயல்படுகிறது. தற்போது சந்தையை திறக்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனா்.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. திருச்சியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் அவர் கூறியதாவது:

காந்தி சந்தையால் திருச்சி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ரூ.77.6 கோடியில் கள்ளிக்குடியில் புதிய சந்தை வளாகம் கட்டப்பட்டு பல மாதங்களாகத் திறக்கப்படாமல் உள்ளது. எனவே காந்தி சந்தையை நிரந்தரமாக மூடிவிட்டு, கள்ளிக்குடியில் கட்டப்பட்டுள்ள புதிய சந்தையை திறக்க வேண்டும் என்று கோரி இருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, காந்தி சந்தையை திறக்க இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிடப்பட்டிருந்தது. தடையை நீக்க வேண்டும் என காந்தி சந்தை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கள்ளிக்குடி சந்தை தொடா்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு வழக்கை ஒத்தி வைத்திருந்தனா்.

இந் நிலையில் இவ்வழக்கு இன்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சந்தையை தற்காலிகமாக செயல்பட அனுமதி வழங்கினர். அத்துடன் புதிதாக கட்டப்பட்டுள்ள கள்ளிக்குடி மார்க்கெட்டில் தற்போதுள்ள வசதி மற்றும் தேவைப்படும் வசதிகள் குறித்து அரசு மற்றும் வியாபாரிகள் சங்கம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை வரும் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.