மதுரை: திருச்சியில் பிரபலமான காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காந்தி மார்க்கெட்டை நிரந்தரமாக மூடவும், கள்ளிக்குடி மார்க்கெட்டை செயல்படுத்தவும் உத்தரவிட கோரி அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

மீண்டும் காந்தி மார்க்கெட் திறக்கப்பட்டால் கொரோனா பரவிவிடும் என்றும், கள்ளிக்குடி மார்க்கெட்டில் சமூக விலகலுக்கு தேவையான இடவசதி உள்ளது என்று மனுதாரர் கிருஷ்ணமூர்த்தி கூறி இருந்தார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

வழக்கு விசாரணையை செப்டம்பர் 14க்கு அவர்கள் ஒத்திவைத்தனர். கொரோனா பரவலை தடுக்க திருச்சி காந்தி மார்க்கெட் மார்ச் 30ம் தேதி மூடப்பட்டது. தற்போது காய்கறி மொத்த விற்பனையானது பொன்மலை ஜி கார்னர் ஹெலிபேட் தளத்திலும், சில்லறை விற்பனை சந்தைகள் மாநகரில் 10 இடங்களிலும் இயங்கி வருகின்றன.