திருச்சி : கொள்ளிட ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்தது

திருச்சி

நேற்று இரவு திருச்சியில் கொள்ளிட ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பழைய இரும்புப்பாலம் இடிந்து விழுந்தது

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்க ஒரு இரும்புப் பாலம் கட்டப்பட்டது    கடந்த 1926 ஆம் வருடம் முதல் 2016 வரை இந்தப் பாலம் பயன்பாட்டில் இருந்தது.   கடந்த 2016 ஆம் வருடம் இதன் அருகில் ரூ.77.77 கோடி செலவில் கட்டப்பட்ட  பாலம் பயன்பாட்டுக்கு வந்தது.   அதன் பிறகு இந்த பாலம் உபயோகப்படுத்தப் படவில்லை.

இந்த இரும்புப் பாலம் கடந்த சில நாட்களாகவே பழுதடைந்து வந்துள்ளது.  மொத்தம் 22 தூண்களில் அமைக்கப்பட்ட இந்தப் பாலத்தின் இரும்புத் தூண்கள் விரிசல் விட தொடங்கியது.    காலப்போக்கில் விரிசல் அதிகரித்து வந்தது.  இவ்வாறு விரிசல் அதிகரித்து 19 ஆம் தூண் இடிந்து விழுந்தது.    பாலம் உபயோகத்தில் இல்லாததால் யாரும் இதை கவனிக்கவில்லை.

இந்நிலையில் 20 ஆம் தூணும் நேற்று இடிந்து விழுந்தது.   அதனால் பாலம் உடைந்து கீழே விழுந்தது.  இந்த பாலம் உபயோகத்தில் இல்லை எனினும் பழைய பாலம் இடிந்ததால் புதிய பாலத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என அச்சம் எழுந்துள்ளது.  எனவே இது குறித்து நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.