திருச்சி:

மிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை விவகாரத்தில், ஒருவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொருவன் தப்பிடியோடி விட்டார். இது தொடர்பாக மேலும் 5 பேரை மடக்கிய போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல நகைக்கடையான  லலிதா ஜூவல்லரியின் திருச்சி கிளை நகைக்கடையில் கடந்த புதன் கிழமை இரவு சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் .பலகோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர  நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், நகைக்கடையில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள 28 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த போது விலங்குகளின் முகத்தைப் போன்ற முகமூடிகளை கொள்ளையர்கள் அணிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொள்ளை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்த கொள்ளை தொடர்பாக சந்தேகத்தின் பேரில்,  புதுக்கோட்டை மாவட்டத்தில் சிலரைப் பிடித்து போலீசார் விசாரித்து வந்தனர். மேலும் லலிதா ஜூவல்லரியில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் வாகன சோதனையும் முடுக்கி விடப்பட்டது. இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியில் போலீசார் நடத்தி வாகன சோதனையின்போது இரு சக்கர வாகனங்ததல்  இருந்த ஒருவன் ஆற்றங்கரை வழியாக தப்பிச் சென்றுவிட, மற்றொருவன் போலீசாரின் பிடியில் சிக்கினான். அவன் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது சுமார் 5 கிலோ நகைகள்  பறிமுதல் செய்யப்பட்டன. நகைகளில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களில் இருந்த பார் கோடை வைத்து சோதனையிட்டபோது அந்த நகைகள் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து பிடிபட்டவனிடம் நடத்திய விசாரணையில், அந்த கொள்ளையன் திருவாரூர்  மடப்புரத்தைச் செர்ந்த மணிகண்டன் என்பதும், தப்பி ஓடியவன் சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பதும் தெரியவந்தது.  கொள்ளையன் சிக்கியது குறித்து திருச்சி தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி போலீசார் திருவாரூர் சென்று மணிகண்டனை திருச்சிக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே தப்பி ஓடிய சுரேஷ், பிரபல ஏடிஎம் கொள்ளையன் முருகனின் தம்பி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மீதமுள்ள நகைகளை சீராதோப்பில் உள்ள தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கொடுத்து வைத்திருப்பதாக மணிகண்டன் கூறியதையடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் சீராதோப்பில் முகாமிட்டுள்ளளனர்.

திருவாரூரில் முகாமிட்டுள்ள திருச்சி கிரைம் எஸ்.பி. மயில்வாகனன் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் திருவாரூர் சுற்றுவட்டாரங்களில் சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த தனிப்படை போலீசார் மணிகண்டன் அளித்த தகவலின் பேரில் இன்று அதிகாலை மேலும் 5 பேரை பிடித்துள்ளனர். மணிகண்டனையும், அந்த 5 பேரையும் ரகசிய இடத்துக்கு கொண்டு சென்றுள்ள போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.