திருச்சி போராட்டம் உழவனின் கண்ணீரை துடைப்பதற்காக நடைபெறும் போராட்டம்: ஸ்டாலின் ஆவேசம்

திருச்சி:

மேகதாது அணைக்கு எதிராக இன்று திருச்சியில் நடைபெற்று வரும்  போராட்டம் உழவனின் கண்ணீரை துடைப்பதற்காக நடைபெறும் போராட்டம்… இது அரசியலுக்கான போராட்டம் அல்ல என்று திமுக தலைவர்  ஸ்டாலின். மேகதாது அணை கட்டி தமிழகத்தை வஞ்சிக்க நினைத்தால் தமிழகத்திற்கு எந்தநாளும் மோடி வர முடியாது என்று  ஆவேசமாக கூறினார்.

கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்ட மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்சியில் இன்று பிரமாண்டமான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

லட்சக்கணக்கானார் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷம்எழுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் உரையாற்றினர். அப்போது திமு தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

1957ம் ஆண்டு திருச்சி அருகே  நங்கவரம் என்ற இடத்தில், உழுதவனுக்கே நிலம் சொந்தம், நாடு பாதி, நங்கவரம் பாதி என்று விவசாயிகளுக்காக கருணாநிதி போராட்டத்தில்  குதித்தார். சுமார் 20 நாட்கள் நடைபெற்ற அந்த போராட்டதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.  அப்போது திருச்சியில் இருந்த குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் முதன் முதலாக சட்ட சபைக்குள் கருணாநிதி நுழைந்து தனது கன்னிப்பேச்சில் உழவனின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும், அதுதான் என்நோக்கம் என்று கூறினார்.

அதேபோன்று இன்று திருச்சியில்  விவசாயிகளின் கண்ணீரை துடைக்க திரண்டுள்ளோம். தீரர்கள் நிறைந்த கோட்டமாம், திருச்சியை தேர்வு செய்து போராடுகிறோம். இது அரசியலுக்காக இல்லை. தேர்தலை எதிர்நோக்குவதற்காக இல்லை. தலைவர் கருணாநிதி கூறியபடி உழவனின் கண்ணீரை துடைப்பதற்காக நடைபெறும் போராட்டம் இது.

திருச்சி திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள்

கஜா புயலில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. ஏற்கனவே தமிழகம் கண்ணீரில் தத்தளிக்கிறது. இந்த நிலையில் மேகதாது அணையை கட்டப் போகிறோம் என மத்திய அரசும், கர்நாடக அரசும் கூறுகிறது இயற்கை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் மத்திய அரசும், மத்திய மோடி அரசும், கர்நாடக அரசும், தமிழகத்தை வஞ்சிக்கிறது. காவிரி ஆறு கர்நாடகாவில் தோன்றி னாலும், அது தமிழகத்தில்தான் அதிகம் பாய்கிறது. இந்த நிலையில் அங்கு புதிதாக மேகதாது அணையை கட்டினால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது.

மத்திய பாஜக அரசின் சதியை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். மேகதாது அணை காட்டும் முயற்சியை தமிழக அரசு எதிர்க்காமல் தூங்கி வருகிறது. மேகதாது அணை பற்றி முதல் அறிவிப்பு வந்தபோதே எதிர்ப்பு தெரிவித்தது திமுக தான். மேகதாது அணைக்கு தடை உத்தரவை கூட ஜெயலலிதா, ஈபிஎஸ்-ஓபிஎஸ் அரசுகளால் பெற முடியவில்லை. இடைக்கால உத்தரவு பெற்றிருந்தால் மேகதாது அணை கட்ட கர்நாடகம் துணிந்திருக்காது. மேகதாது அணை பிரச்சனை பற்றி விவாதிக்க சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தை கூட்ட வேண்டும்.

ஆனால் அப்படி செய்யவில்லை. எனவே தான் நாங்கள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினோம். தமிழக அரசு சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினோம். தமிழகத்திற்கு வரும் இந்த ஆபத்தை தடுக்க தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இங்கு கூட்டத்தை கூட்டியிருக்கிறோம்.

தமிழகத்தை பா.ஜனதா அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. கஜா புயலால் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆனால் அரசு வெளியிட்ட புள்ளி விபரம் தவறு. மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். மற்ற மாநிலத்தில் இதுபோன்ற பேரிடர் நடந்திருந்தால் பிரதமர் செல்லாமல் இருந்திருப்பாரா?

ஆனால் அவர் தமிழகத்திற்கு வரவில்லை. இந்தியாவில் இருந்திருந்தால் அவர் வந்திருப்பார். இப்போதும் தமிழகத்திற்கு எதிர்பார்த்த நிவாரண தொகையை மத்திய அரசு வழங்குமா என்பது சந்தேகம் தான். பேரிடர் மேலாண்மை குழு தலைவராக பிரதமர் இருக்கிறார். முதல்வரும் அதில் உறுப்பினராக உள்ளார். ஆனால் தமிழகத்திற்கு போதுமான நிதி வழங்கப்படவில்லை.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஒக்கி புயல், வர்தா புயல், கஜா புயல் உள்ளிட்ட புயல்களால் பாதிக்கப்பட்ட மொத்த தொகை ரூ.60 ஆயிரம் கோடி. ஆனால் மத்திய அரசு வெறும் 3 ஆயிரம் கோடிதான வழங்கியுள்ளது. தேசிய பேரிடர் ஆணையம் திட்டக்கமி‌ஷன் இருந்து என்ன பயன்?

தமிழக மக்கள் எதற்காக மத்திய அரசுக்கு வரி கட்ட வேண்டும் என்று கேட்க தோன்றுகிறது. இப்படி இருந்துகொண்டு தமிழகத்தில் தாமரை மலரும் என்கிறார்கள். புற்களே முளைக்காத போது தாமரை எப்படி மலரும். எனவே இதுபோன்ற நிலையை மத்திய அரசு தொடர்ந்தால் வைகோ, வீரமணி கூறியதுபோல் தமிழகத்திற்கு நரேந்திர மோடி வரமுடியாத சூழ்நிலை ஏற்படும்.

மேகதாது அணை கட்டி தமிழகத்தை வஞ்சிக்க நினைத்தால் தமிழகத்திற்கு எந்தநாளும் மோடி வர முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பேசிய   வைகோ,  மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. பிரதமர் மோடி செய்யும் நல்லவை எது என்பதை ரஜினி விளக்கம் வேண்டும். மேகதாது விவகாரத்தில் மோடியின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என தமிழக அரசு அமைதி காக்கிறது என்றார்.

கம்யீனிஸ்டு தலைவர்  முத்தரசன் பேசுகையில்,  எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்தான் என்று உறுதிப்பட கூறினார்.

திமுகவிற்குள் உள்ள ஒற்றுமையை சீர்குலைக்க பார்க்கிறார்கள் என்று திருமாவளவன் தெரிவித்தார்.