திருச்சி ராமஜெயம் கொலை: விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி ஐகோர்ட்டு உத்தரவு!

மதுரை,

திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பியும், தொழிலதிபருமான  திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ க்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தமிழக சிபிசிஐடி கொலைக்கான ஆதாரத்தை கண்டுபிடிக்க முடியாத நிலையில், இன்று சிபிஐ விசாரணைக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் 3 மாதத்தில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனுவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு,  திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டார். கொலை நடைபெற்று 5 ஆண்டுகள் முடிந்தும் குற்றவாளிகள் யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. அதனால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி லதா உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பஷீர்அகமது முன் கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது  சிபிசிஐடி போலீஸார் சார்பில் 12வது விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ராமஜெயம் கொலை தொடர்பாக 300 காரணங்கள் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும்,  குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். விசாரணை இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. எனவே மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் ராமஜெயம் கொலை பற்றிய தகவல் தெரிவித்தால் பரிசு வழங்கப்படும் எனவும் சிபிசிஐடி அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், போலீசாரின் கோரிக்கைக்கு  மனுதாரரின் வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.  ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. எனவே சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று வாதிட்டார்.

அதைத்தொடர்ந்து இந்த கடந்த ஏப்ரல் மாதம் 27ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்த தீர்ப்பை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிபிசிஐடி விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால் வழக்கை  சிபிஐ விசாரிக்க  உத்தரவிட்டார்.

மேலும் 3 மாதத்தில் வழக்கின் விசாரணை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிபிஐக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.