பிரசாந்த் கிஷோர் திருணாமுல் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா?

டில்லி

பிரபல தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோரை திருணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினராக்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மோடிக்கு ஆதரவாக பணியாற்றி அவரை பிரதமராக்கிய பிரசாந்த் கிஷோர் அதன்பிறகு பீக்காரில் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்காக பணியாற்றி நிதிஷ்குமாரை முதல்வர் ஆக்கினார்.  ஆயினும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் அந்த கூட்டு முறிந்து நிதிஷ்குமார் பாஜகவுடன் கூட்டணி அமைச்சரவை அமைத்தார்.

அதன் பிறகு பிரசாந்த் கிஷோர் ஆந்திர மாநில தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகப் பணி புரிந்தார்.   அதையொட்டி மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திருணாமுல் காங்கிரஸுக்கும், தமிழகத்தில் திமுகவுக்கும் ஆதரவாக பிரசாந்த் கிஷோர் பணி புரிந்து வருவதாகத் தகவல்கள் வந்துள்ளன.  ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத்தலைவராக இருந்த பிரசாந்த் கிஷோரை சிஏஏ எதிர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் காரணமாக நிதிஷ்குமார் கட்சியில் இருந்து நீக்கினார்.

அடுத்த மாதம் மேற்கு வங்க மாநிலத்தில் பதவிக் காலம் முடியும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளன.  பிரசாந்த் கிஷோருக்கு மம்தா பானர்ஜி திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாய்ப்பளிக்க முன் வந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.    பாஜகவை வீழ்த்தும் நோக்கத்தில் பிரசாந்த் கிஷோரை நியமித்த மம்தா பானர்ஜி அவருக்கு அரசியல் அங்கிகாரம் அளிக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது..

கார்ட்டூன் கேலரி