“திரினாமூல் காங்கிரஸ் கட்சி, கொரோனாவை காட்டிலும் அபாயகரமான வைரஸ்” பா.ஜ.க. தலைவர் கருத்து

மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் இப்போதே அனல் பறக்கிறது.

அங்குள்ள தெற்கு பர்கானா மாவட்டம் குல்பி என்ற இடத்தில் நேற்று நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் அந்த கட்சியின் மே.வங்க மாநில தலைவர் திலீப் கோஷ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.

“கொரோனா வைரசை காட்டிலும் திரினாமூல் காங்கிரஸ் கட்சி அபாயகரமான நோய்” என்று குறிப்பிட்ட்ட அவர் “அடுத்த ஆண்டு நடைபெற விருக்கும் சட்டமன்ற தேர்தலில் இந்த வைரசை (திரினாமூல் காங்கிரஸ்) விரட்டி அடிக்கும் தடுப்பு மருந்தாக பா.ஜ.க. இருக்கும்” என தெரிவித்தார்.

“மே.வங்கத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் எங்கள் கட்சியினர் மீதும், ஏனைய எதிர்க்கட்சிகள் மீதும் போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும்” என அவர் கூறினார்.

“எனினும் எதிர்க்கட்சியினர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்ட திரினாமூல் காங்கிரஸ் கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என திலீப் கோஷ் எச்சரித்தார்.

– பா. பாரதி