கேரளாவில் அதிரடிப்படை குவிப்பு.. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு மும்முனை கண்காணிப்பு… வீடியோ…

திருவனந்தபுரம் :

லகெங்கும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும், இந்தியாவில் முதல் முதலில் ஜனவரி 30 ம் தேதி கேரளாவில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த வைரஸ் வேகமாக பரவ தொடங்கி மார்ச் 24 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கேரளாவில் இந்த வைரஸின் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டது.

கடந்த ஒரு வார காலமாக கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ‘மும்முனை தடை’ விதித்து பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு அறிவித்துள்ளது.

‘மும்முனை தடையுள்ள’ பகுதிகளில் நகருக்குள் சென்று வர முக்கிய சாலை சிலவற்றை தவிர அனைத்து உட்புற சாலைகளையும் அடைத்துள்ளனர், உரிய ஆவணத்துடனும் தகுந்த காரணமுமின்றி வெளியில் செல்லும் நபர் மீது கிரிமினல் வழக்கு பதிந்து அபராதம் விதிக்கப்படுகிறது.

நோய் தொற்று அதிகமுள்ள ‘கிளஸ்ட்டர்’ பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியேறாமல் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர், மளிகை காய்கறி உள்ளிட்ட அவர்களின் அன்றாட தேவைகளுக்கு உதவி மைய எண்களை அழைத்தால் வீடு தேடி பொருட்களை கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பகுதியில் உள்ள பாதிக்கப்பட்டவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் பார்த்துக்கொள்வதும் இங்குள்ள சுகாதார பணியாளர்களின் முக்கிய கடமையாக இருக்கிறது.

இந்நிலையில், திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் அருகில் உள்ள பூந்துறை பகுதியில், நோய் தொற்று அதிகமாக இருப்பதால் இந்த பகுதியில் கேரள சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, இங்குள்ள மக்கள் அரசுக்கு ஒத்துழைக்காமல் வெளியில் செல்வது, அரசின் உத்தரவை மீறி முகக்கவசம் அணியாமல் சுற்றுவது போன்ற தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்ததால் தற்போது அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழகத்தின் கன்னியாகுமரி பகுதியில் இருந்து திருவானந்தபுரத்திற்கோ அல்லது திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கோ மக்கள் யாரும் செல்லாதவாறு தமிழக கேரள எல்லையில் போலீசாரின் பாதுகாப்பை இரு மாநில போலீசாரும் பலப்படுத்தியுள்ளனர். அதேபோல், கேரள எல்லையை ஒட்டிய தமிழகத்தின் தேனி, போடி உள்ளிட்ட பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பூந்துறை பகுதியில், துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினரின் கொடி அணிவகுப்பு இந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இணைப்பு வீடியோ ..

 

கார்ட்டூன் கேலரி