Random image

முத்தலாக் விவாதம் : சூடு பறக்கும் மக்களவை

டில்லி

க்களவையில் முத்தலாக் தடை மசோதா மீது சூடு பறக்கும் விவாதம் நடந்து வருகிறது.

இஸ்லாமிய ஆண்கள் தங்கள் மனைவியை விவாகரத்து செய்ய மூன்று முறை தலாக் என கூற வேண்டும். அவ்வாறு ஒரே நேரத்தில் கூறக்கூடாது என இஸ்லாமிய மறை நூலான குரானில் சொல்லப்பட்டுள்ளது. ஆயினும் ஒரே நேரத்தில் மும்முறை தலாக் கூறி விவாகரத்து செய்வது இஸ்லாமிய ஆண்கள் இடையே இன்னும் உள்ளது. உச்சநீதிமன்றம் அவ்வாறு செய்யக்கூடாது என உத்தரவிட்டது. மேலும் முத்தலாக்கை தடை செய்ய சட்டமியற்ற அரசுக்கு உத்ஹ்டரவிட்டது.

அதை ஒட்டி மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்தது. அதன் பிறகு அந்த சட்ட மசோதா வழக்கமான சட்டமாக்க மசோதாவாக்கப்பட்டு மாநிலங்களவையில் அளிக்கப்பட்டது. அங்கு எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்களுடன் புதிய மசோதாவாக மாற்றப்பட்டது. இந்த மசோதா இன்று மக்களவையில் விவாதத்துக்கு வந்தது.

இன்று ரபேல் போர் ஒப்பந்தம் குறித்தும் மேகதாது அணைக்கட்டு குறித்தும் எழுந்த அமளியால் இரண்டு மணி வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மசோதாவை அவைக்கு அளித்தார். அவர் “ஒரே நேரத்தில் முத்தலாக் கூறுவதை தடை செய்ய இந்த மசோதா இயற்றப்பட்டுள்ளது. இது எந்த ஒரு மதத்துக்கும் எதிரானது அல்ல. பெண்களுக்காகவும் மனித நேயம் காக்கவும் இந்த மசோதா இயற்றபட்டுள்ளது” என் தெரிவித்தார்.

இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவ்ர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன காட்கேவும் கூட்டுக் குழு கூட்டத்துக்கு அனுப வேண்டும் என திருணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுதிப் பந்தோபாத்யாயாவும் தெரிவித்தனர். கேரளாவை சேர்ந்த உறுப்பினர் பிரேமசந்திரன், ”இந்த மசோதா வரும் 2019 தேர்தலை மனதில் கொண்டு இயற்றப்பட்டுள்ளத். இஸ்லாமியர்கள் முத்தலாக் செய்வதால் கிரிமினல்கள் எனக் கூறும் மசோதா இந்துக்களையும் கிறித்துவர்களையும் ஏன் குறிப்பிடவில்லை?” என கேள்வி எழுப்பினார்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சி உறுப்ப்பினர் சுஷ்மிதா தேவ், “இது பெண்களுக்கு அதிகாரம் கொடுக்கும் மசோதா என கூறும் வேளையில் இது தவறானதும் ஆகும். இந்த மசோதாவில் பெண்கள் சமத்துவத்தை பேசும் அரசு அதே நேரத்தில் கணவன் சிறைக்கு சென்றால் பாதிக்கப்படுவது மனைவிதான் என்பதை மறந்து விட்டது. அவர்கள் நிலை என்னவாகும் என நான் கேட்கிறேன்.

இஸ்லாமிய சட்டப்படி திருமனம் என்பது ஒப்பந்தம் ஆகும். அந்த ஒப்பந்தத்தை முறிப்பது சிவில் குற்றம் ஆகும். அப்படி இருக்க இதை எவ்வாறு கிரிமினல் குற்றமாக்க முடியும்? இவ்வாறு இந்து திருமணச் சட்டத்திலோ வேறு எந்த சட்டத்திலோ இல்லை. இஸ்லாமிய பெண்களுக்கு அதிகாரம் அளிகும் இந்த சட்டம் இஸ்லாமிய ஆண்களுக்கு தண்டனை அளிக்கிறது. இது பாலியல் அநீதி இல்லையா?” என கேள்விகள் எழுப்பி உள்ளார்.

You may have missed