முத்தலாக் மசோதா: மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுவது ஒத்திவைப்பு

டில்லி:

முத்தலாக் திருத்தப்பட்ட மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படும் என அறிவித்திருந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்படவில்லை.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இன்று மழைக்கால கூட்டத்தொடரின் இறுதி நாள். கூட்டத்தொடர் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே முத்தலாக் சட்ட திருத்த மசோதா பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்,   இன்று  மாநிலங்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது.

ஆனால், மசோதா விதிகள் குறித்து  கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாததால் இன்று தாக்கல் செய்யப்படுவதை ஒத்தி வைத்துள்ளது மத்தியஅரசு.

முத்தலாக்கை தடை செய்யும், முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்புச் சட்டத்தில் ஜாமீன் வழங்கும் பிரிவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று  ஒப்புதல் அளித்தது. இச்சட்டத்தின்படி தொடர்ந்து மூன்று முறை தலாக் கூறி மனைவி விவாகரத்து செய்யும் நபருக்கு 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். இது தவிர கடிதம், மின்னஞ்சல், எஸ்எம்எஸ் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட மின்னணு வழிகள் மூலம் முத்தலாக் கூறுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். அதே நேரத்தில் இந்த சட்டத்தில் ஜாமீன் வழங்கும் பிரிவைச் சேர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், அந்தப் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க முடியும்.

இன்று மழைக்கால கூட்டத்தொடரின் கடைசிநாள் என்பதால், இந்த மசோதா நிறைவேற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆளும் பாஜக அரசு வலியுறுத்தி இருந்தது. ஆனால் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், மசோதா தாக்கல் செய்யப்படுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Triple Talaq Bill not tabled in Rajya Sabha due to lack of consensus on provisions of the Bill. Monsoon Session of Parliament will not be extended., முத்தலாக் மசோதா: மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுவது ஒத்திவைப்பு
-=-