‛முத்தலாக்’.. மூன்று வருட சிறை.. பாராளுமன்றத்தில் இன்று மசோதா தாக்கல்

டில்லி:

‛முத்தலாக்’ தடை மசோதா பார்லியில் இன்று(டிச.,28) தாக்கல் செய்யப்பட  இருக்கிறது. மசோதாவை  நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஆதரவை மத்திய அரசு கோரியுள்ளது.

மனைவியை, ‘தலாக்’ என, மூன்று முறை கூறி, விவாகரத்து செய்யும் வழக்கம், இஸ்லாமிய மக்களிடையே உள்ளது.  “குறிப்பிட்ட காலக்கெடுவில் தனித்தனியே மூன்று முறை தலாக் சொல்வதற்கு பதிலாக, ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்வது நடைமுறையில் உள்ளது. சிலர் போன் மூலம் ஒரே நேரத்தில் தலாக் என்று மூன்று முறை அனுப்பி விவாகரத்து ஆகிவிட்டதாக கூறுவதும் நடக்கிறது.

இதனால் இஸ்லாமிய பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்” என்று  அம்மதத்தைச் சேர்ந்த பெண்கள் பலர் குரல்கொடுத்து வந்தனர். சிலர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். கடந்த ஆக., 22ல், இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘முத்தலாக், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது’ என, தெரிவித்தது.


இதையடுத்து, முத்தலாக் விவாகரத்தை, தண்டனைக்குரிய குற்றமாக்க வகை செய்யும் மசோதா தயாரிக்கப்பட்டு அதற்கு, மத்திய அமைச்சரவை, ஒப்புதல் அளித்தது.

முத்தலாக் கூறி விவாகரத்து செய்தால், மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கவும், அபராதம் விதிக்கவும், இந்த சட்டத்திருத்த வரைவு மசோதா வகை செய்கிறது. இந்த மசோதாவின்படி, முத்தலாக் நடைமுறை, ஜாமினில் வர முடியாத குற்றமாக கருதப்படும்.

இந்த நிலையில் மசோதா, பாராளுமன்ற லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது.  மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மசோதாவை அறிமுகம் செய்ய உள்ளார். முத்தலாக் சட்ட மசோதா  பாராளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க  வேண்டும் என மத்திய பாராளுமன்ற  விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் குர்ஆனுக்கு எதிராக இருந்தால் ‛முத்தலாக்’ மசோதா சட்ட மசோதாவை ஏற்க முடியாது என்று  அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.