Random image

‘முத்தலாக்:’ அரசியல் கால்பந்தாக விளையாடும் மத்திய அரசு! காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி:

முத்தலாக்  விவகாரத்தை மோடி அரசு அரசியல் கால்பந்தாக நினைத்து விளையாடுகிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

முத்தலாக் தடை அவசர சட்டத்துக்கு நேற்று கேபினட் ஒப்புதல் கொடுத்த நிலையில், அதற்கான கோப்பில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து முத்தலாக் தடை தொடர்பான அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்திற்கு இஸ்லாமியர்களின் ஒரு பிரிவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற னர். இந்த நிலையில், முத்தலாக் அவசர சட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

                                                                                  காங். செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா,

முத்தலாக் விவகாரத்தை பெண்கள் உரிமை தொடர்பான மனிதாபிமான பிரச்சினையாகவே காங்கிரஸ் கட்சி கருதுகிறது. பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். எனவேதான், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக சல்மான் குர்ஷித், மணீஷ் திவாரி போன்ற  காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வாதாடினர்.

ஆனால்,  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாரதியஜனதா அரசோ,  முத்தலாக் விவகாரத்தை, முஸ்லிம் பெண்களுக்கான நீதி என்பதைவிட அரசியல் கால்பந்தாக நினைத்து விளையாடி வருகிறது.

பாதிக்கப்படும் முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைப்பதையும் ஜீவனாம்சம் கிடைப்பதையும் மோடி அரசு விரும்பவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர் ஜீவனாம்சம் வழங்க மறுத்தால் அவரது சொத்தை பறிமுதல் செய்யும் வகையில் மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற எங்களது கோரிக்கை ஏற்கப்பட வில்லை என்று குற்றம் சாட்டினார்.

மேலும் இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஆணுக்கு சிறை தண்டனை வழங்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது. அவ்வாறு சிறையில் அடைத்துவிட்டால், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குழந்தைக்கு ஜீவனாம்சம் எப்படி கிடைக்கும்.

இவ்வாறு ரந்தீப் சுர்ஜிவாலா கூறினார்.