முத்தலாக் சட்டம் முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கும்: பாமக தலைவர் ராமதாஸ்

--

சென்னை:

த்திய அரசு கெண்டு வந்துள்ள முத்தலாக் தடை அவசர சட்டம், முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையை மேலும் சிக்கலாக்கும் வகையில் உள்ளது என்று பாமக தலைவர் ராமதாஸ் கூறி உள்ளார்.

முத்தலாக் தடை அவசர சட்டத்துக்கு நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவை  ஒப்புதல் கொடுத்த நிலையில், அதற்கான கோப்பில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து முத்தலாக் தடை தொடர்பான அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்திற்கு இஸ்லாமியர்களின் ஒரு பிரிவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், பாமக தலைவர் ராமதாஸ் முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது, மேலும் சிக்கலாக்கும் என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“இஸ்லாமியப் பெண்களின் திருமண உறவை பாதுகாப்பதற்காக முத்தலாக் முறையை தடை செய்யும்  அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது. ஆனால், இஸ்லாமியப் பெண்களின் கண்ணியம் மற்றும் கவுரவத்தைப் பாதுகாக்க மத்திய அரசின் அவசரச் சட்டம் எந்த வகையிலும் பயனளிக்காது.

இஸ்லாமியப் பெண்களின் திருமண உரிமைக்கு எதிராக முத்தலாக் முறை அமைந்திருந்தது என்பதில் ஐயமில்லை. அதனால் தான் முத்தலாக் முறையை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ரத்து செய்தது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்துவதற்கு ஏற்ற கருவி அல்ல. இது இஸ்லாமியப் பெண்களுக்கு எதிரானதாகவே அமையும்.

மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தின்படி முத்தலாக் கூறி இஸ்லாமியப் பெண்களுடனான திருமண உறவை முறித்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்பட்டுள்ளது. இது பிணையில் வெளிவரக்கூடிய குற்றம் தான் என்றாலும் கூட, காவல் நிலையத்தில் பிணை பெற முடியாது; நடுவர் நீதிமன்றத்திற்கு சென்று தான் பிணை பெற முடியும் என்று சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.

இஸ்லாமியர்களிடையே தலாக் -இ- பாயின் என்ற மணமுறிவு முறை நடைமுறையில் உள்ளது. அது சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் கூறவில்லை. ஆனால், மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தில் தலாக் -இ- பாயினும் தண்டனைக்குரிய குற்றமாக சேர்க்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது. இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது குடிமை ஒப்பந்தம் என்றும் அத்தகைய ஒப்பந்த மீறலுக்கு சிறை தண்டனை விதிப்பது முறையல்ல என்றும் இஸ்லாமியத் தலைவர்கள் கூறுகின்றனர்.

அண்டைநாடான பாகிஸ்தான் உள்ளிட்ட 22 நாடுகளில் முத்தலாக் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த நாட்டிலும் முத்தலாக் என்பது தண்டனைக்குரியக் குற்றமாக அறிவிக்கப்படவில்லை.  அவ்வாறு இருக்கும் போது இந்தியாவில் மட்டும் அதை தண்டனைக்குரியக் குற்றமாக அறிவிப்பது ஏன்?

இஸ்லாமியரின் சமூக, கலாச்சார, பண்பாட்டு நடைமுறைகளை மதிக்கும் வகையில் தான் இந்தியாவில் ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ளது; இஸ்லாமியர் தனிநபர் சட்ட வாரியமும் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் முத்தலாக் தடை தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளிடம் கலந்து பேசி ஒருமித்த கருத்தை உருவாக்கிய பிறகே எந்த ஒரு சட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்திருக்க வேண்டும். மாறாக மத்திய அரசு தன்னிச்சையாக பிறப்பித்துள்ள இந்த அவசரச் சட்டம் இஸ்லாமியப் பெண்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு பதிலாக நிலைமையை மேலும், மேலும் மோசமாக்கவே வகை செய்யும்.

“தலாக்” முறைக்கு எதிராக முஸ்லிம் பெண்கள் ஆர்ப்பாட்டம் (பைல் படம்)

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை இஸ்லாமியப் பெண்களின் திருமண உறவை முறிக்கப் பயன்படுத்தப்படும் முத்தலாக் முறை தடை செய்யப்பட வேண்டும்; அதேநேரத்தில் அது தண்டனைக்கு உரிய குற்றமாக இருக்கக்கூடாது. மாறாக கைவிடப்படும் இஸ்லாமிய பெண்களின் கண்ணியம், கவுரவம், வாழ்வாதாரம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் தான் இஸ்லாமியப் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம் வகுக்கப்பட வேண்டும்.

அதற்கு வசதியாக இப்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர சட்டத்தை ரத்து செய்து விட்டு, இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்துடன் ஆலோசனை நடத்தி புதிய சட்ட முன்வரைவை உருவாக்கி நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.