கணவனால் கைவிடப்பட்ட பெண்களைப் பாதுகாக்க சட்டம் இயற்றுங்கள்: ஓவைசி காட்டம்
ஐதராபாத்:
முத்தலாக் அவசர சட்டம் நேற்று மத்திய அரசு அமல்படுத்தி உள்ள நிலையில், இந்த சட்டத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
எம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி முத்தலாக் அவசர சட்டத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
முத்தலாக் தடுப்புச் சட்டத்தைக் காட்டிலும், கணவர்களால் கைவிடப்பட்ட பெண்களைப் பாதுகாக்க சட்டம் இயற்றுங்கள் என்று பிரதமர் மோடியை எம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி காட்டமாக விமர்சித்துள்ளார்.
முஸ்லிம் மதத்தில், கணவர் மனைவியை விவாகரத்து செய்ய பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறை சட்டம், விரோதமானது என்று கடந்த ஆகஸ்டு மாதம் சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு கூறியது. அதைத்தொடர்ந்து, முத்தலாக் நடைமுறையை தடை செய்யும் ‘‘முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா’’வை தயாரிக்கப்பட்டு, பாராளுமன்ற மக்களவையில் மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி தாக்கல் செய்தார்.
அப்போது, பேசிய அமைச்சர் ரவிசங்கர், பெண்களின் உரிமைகள் மற்றும் நீதியை பாதுகாக்கவே இந்த மசோதா. இதில் மதத்திற்கு தொடர்பில்லை என கூறினார். இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், மாநிலங்களவையில் இன்னும் நிறைவேறவில்லை.
இந்நிலையில், முத்தலாக் தடுப்பு மசோதாவை அவசரச்சட்டமாக நேற்று மத்திய அரசு பிறப்பித்தது.
இந்த சட்டத்தின்படி, ஏற்கனவே இஸ்லாமியர்கள் கடைபிடித்து வரும், முத்தலாக் நடைமுறை (Triple Talaq Ordinance) மூலம், முஸ்லீம் ஆண்கள் மும்முரை ‘தலாக்’ என்று சொல்லி உடனடியாக விவகாரத்து (instant divorce) வாங்க முடியாது.
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள சட்டத்தின் மூலம், முத்தலாக்கை பின்பற்றுபவர் களுக்கு, அபராதத்துடன் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
இந்த சட்டத்தை இஸ்லாமிய அமைப்புகள் எதிர்த்து வரும் நிலையில், எம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசியும் கடுமையாக சாடி உள்ளார்.
முத்தலாக் தடுப்பு சட்டம், முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது. இந்த அவசரச்சட்டம் மேலும் அநீதியைத்தான் இழைக்கும்.
நாட்டில் இந்துப் பெண்களில் பலரை அவர்களின் கணவர்கள் ஒதுக்கி வைத்து வாழாமல் இருக்கிறார்கள். அந்தப் பெண்களை பாதுகாக்கப் பிரதமர் மோடி சட்டம் கொண்டு வர வேண்டும். கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி, 24 லட்சம் ஏழைப்பெண்கள் திருமணமாகி, தங்கள் கணவர்களுடன் வாழாமல் இருக்கிறார்கள். இதுபோன்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பிரதமர் மோடி சட்டம் கொண்டு வர வேண்டும்.
இஸ்லாமிய திருமணம் என்பது சிவில் ஒப்பந்தம், அதற்குத் தண்டனையை கொண்டுவருவது என்பது தவறானது தேவையில்லாதது. இதுபோன்ற அவசரச்சட்டங்கள் கொண்டுவருவது, முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், சமத்துவ உரிமையை மீறும் வகையிலும் இருக்கிறது.
இதை எதிர்த்து முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும்.
முத்தலாக் சட்டப்படி ஒரு முஸ்லிம் ஆண் குற்றமுள்ளவர் என்று நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனைக் கிடைக்கும். இதே குற்றத்தை முஸ்லிம் அல்லாதவர் செய்தால், அவருக்கு நீதிமன்றம் அதிகபட்டசமாக ஒரு ஆண்டு சிறை தண்டனை மட்டுமே கொடுக்கிறது. இது என்ன நியாயம். இது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவது இல்லையா.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசரச் சட்டம் என்பது, நாட்டில் நிலவும் பல்வேறு விஷயங் களில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பிவிடுவதாகும்.
குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்புகுறைவு ஆகியவற்றை மறக்கடிக்கச் செய்ய வேண்டும்.
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்குள்ள மக்கள், பாஜகவின் பிரித்தாளும் கொள்கையை நிராகரித்துத் தோற்கடிப்பார்கள்.
இவ்வாறு ஓவைசி காட்டமாக விமர்சித்தார்.