திறந்தவெளி பூங்காவில் திரிபுரா சட்டசபை கூட்டத்தை நடத்தத் திட்டம்..
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தனி நபர் இடைவெளி முக்கியம் என்பதால், மாநிலங்களில் சட்டசபை கூட்டங்கள், பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளோடு, நடந்து வருகின்றன.
இந்நிலையில், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் திரிபுரா மாநிலத்தில் திறந்த வெளி பூங்காவில் சட்டசபை கூட்டத்தை நடத்த அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவில் உள்ள ஹெரிடேஜ் பூங்காவில் பேரவை கூட்டம் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த பூங்காவை மாநில சட்ட அமைச்சர் ரத்தன் லால் நாத் நேற்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் நாத், ‘’கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி தேவை. எனவே இப்போதுள்ள சூழ்நிலையில் சட்டசபை கூட்டத்தைச் சட்டப்பேரவை வளாகத்தில் நடத்த முடியாது. வெளியே பாதுகாப்பான இடத்தில் நடத்துவதே சரியாக இருக்கும் ‘’ என்று தெரிவித்தார்.
‘பல மாநிலங்கள் பேரவை வளாகத்துக்கு வெளியே பேரவை கூட்டங்களை நடத்தியுள்ளது’’ என்று குறிப்பிட்ட அமைச்சர் ரத்தன் லால் நாத்,’ எனவே  திரிபுரா சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரை ஹெரிடேஹ் பூங்காவில் நடத்த இயலுமா?’’ என நேரில் பார்த்து ஆய்வு செய்துள்ளேன்’ என்று மேலும் தெரிவித்தார்.
-பா.பாரதி.