திரிபுரா பாஜக முதல்வர் மீண்டும் உளறல்…நோபல் பரிசை தாகூர் நிராகரித்தாராம்

--

அகர்தலா:

திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் சமீபகாலமாக ஆர்வகோளாறில் எதை எதையோ பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஆனாலும், அவர் அதை நிறுத்துவதாக இல்லை தற்போது புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார்.

தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு கோமதி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், ‘‘ஆங்கிலேய அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது தனக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசை நிராகரித்தவர் ரவீந்திரநாத் தாகூர்’’ என்று தெரிவித்தார்.

முதல்வரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திரிபுராவின் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த கிஷோர் தேவ்புர்மான் கூறுகையில், ‘‘ 1919-ம் ஆண்டில் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் போராட்டத்தின் போது, தாகூர் தனக்கு அளிக்கப்பட்ட வீரத்திருமகன் பட்டத்தை நிராகரித்ததாகவும், அதனால், எனது தாத்தா மன அமைதியின்றி இருந்ததாகவும் அவரது டைரியில் குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் இந்த கருத்து முட்டாள்தனமாக உள்ளது’ என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பிராஜித் சின்ஹா கூறுகையில், ’முதல்வரின் இதுபோன்ற கருத்துக்களால் வெட்கப்படவேண்டியிருக்கிறது’ என்றார்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதக் கூடாது. டயானா அழகி பட்டத்துக்கு தகுதியற்றவர். புத்தர் வெளிநாடுகளில் நடைபயணம் மேற்கொண்டார், ராமாயண காலத்திலேயே இன்டர்நெட், செயற்கைக் கோள் இருந்தது என்று அபத்தமாக பேசி எதிர்ப்பை தேடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.