திரிபுரா: அரசு அதிகாரிகள் ஜீன்ஸ் அணிய தடை…செல்போனுக்கும் கட்டுப்பாடு

அகர்தலா:

திரிபுராவில் அரசு அதிகாரிகளுக்கு ஆடைக் கட்டுப்பாடு குறித்து முதன்மை செயலாளர் சுஷில் குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘அரசு அதிகாரிகள் ஆடைக் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.

பணி நேரத்தின்போது ஜீன்ஸ் பேன்ட், கார்கோ பேன்ட், டி-ஷர்ட், கூலிங் கிளாஸ் உள்ளிட்டவற்றை அணிவது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. மேலும், பல அரசு அதிகாரிகள் அலுவலக நேரத்திலும், ஆலோசனைக் கூட்டங்களிலும் மொபைல் போன்களை பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன.

அதனால் திரிபுராவில் பணி நேரத்தின்போது ஜீன்ஸ் பேன்ட், கார்கோ பேன்ட், டி-ஷர்ட், கூலிங் கிளாஸ் உள்ளிட்டவற்றை அணிய தடை விதிக்கப்படுகிறது. அலுவலக ஆலோசனைக் கூட்டங்களின் போது மொபைல் போன்களை அணைத்து வைக்க வேண்டும். இதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.