Random image

பந்த் அன்று பணிக்கு வராத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை….திரிபுரா அரசு உத்தரவு

அகர்தலா:

காங்கிரஸ் தலைமையில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தின் போது பணிக்கு வராத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க திரிபுரா அரசு உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்தியது. அன்றைய தினம் பணிக்கு வராத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க திரிபுரா அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஊழியர்கள் அனைவரும் அன்றைய தினம் பணிக்கு வருவதை உறுதி செய்யுமாறு துறை தலைவர்களுக்கு திரிபுரா அரசின் பொது நிர்வாக துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘அன்றைய தினம் பணிக்கு வராத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க 2வது முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சில ஊழியர்கள் தனிப்பட்ட பிரச்னை காரணமாக பணிக்கு வரவில்லை. உடல் நிலை பாதிப்பு, போக்குவரத்து வசதி இல்லாமை போன்றவையும் சில காரணங்களாகும். ஊழியர்கள் பணிக்கு வராததற்கான காரணத்தை ஆராயவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முழு அடைப்பு போராட்டத்தில் திரிபுரா எதிர்கட்சியான சிபிஐ(எம்), சிபிஐ, புரட்சிகர சோஷியலிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளும் கலந்துகொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.