அகர்தலா: திரிபுரா மாநிலத்தில், ஆளுங்கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, அம்மாநிலத்தில் நடைபெற்ற பழங்குடியினர் கவுன்சில் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளது.

பாஜக அருவெறுக்கத்தக்க அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஆட்சியில் பங்குபெற்ற வடகிழக்கு மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று.

இந்நிலையில், அம்மாநிலத்தில் பழங்குடியினர் கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில், மொத்தம் 28 இடங்களில், புதிய கூட்டணியான பூர்வீக முற்போக்கு பிராந்தியக் கூட்டணி(TIPRA), 18 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

பாஜக இடம்பெற்ற கூட்டணிக்கு வெறும் 9 இடங்களே கிடைத்துள்ளன. சுயேட்சை வேட்பாளர், எஞ்சிய ஒரு இடத்தைக் கைப்பற்றியுள்ளார். ‍அதேசமயம், இடது முன்னணி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு 1 இடம்கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது.

TIPRA கூட்டணிக்கு தலைமையேற்றவர் பிரத்யோத் மாணிக்யா டெப் பர்மன் என்பவர். அரச குடும்பத்தைச் சேர்ந்த இவர், திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர்.

கடந்த 2018ம் ஆண்டு, பாஜக கூட்டணிக்கு பெரிய வெற்றி கிடைத்திருந்தது. ஆனால், 3 ஆண்டுகளில் நிலைமை அப்படியே மாறியுள்ளது.