திருச்சூர் பூரம் திருவிழா – இந்தாண்டும் சடங்குகளுக்கு மட்டுமே அனுமதி!

திருவனந்தபுரம்: கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, கேரளாவின் திருச்சூரில் நடைபெறும் புகழ்பெற்ற பூரம் திருவிழாவில், இந்தாண்டும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பூரம் திருவிழாவில், வெறும் சடங்குகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டும் இதேநிலைதான் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்த முடிவு எட்டப்பட்டது. இதற்கு முன்னதாக, பூரம் திருவிழாவை வழக்கமான முறையில் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

ஒருநாளின் பாதிப்பு 1000ஐ தாண்டி வருகிறது. திருச்சூரின் கொரோனா விகிதம் 21.97% என்பதாக உள்ளது. எனவே, முந்தைய முடிவு மாற்றியமைக்கப்பட்டு, வெறும் சடங்குகளுக்கு மட்டுமே அனுமதியளிப்பது என்ற புதிய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் புதிய முடிவை, திருவம்பாடி மற்றும் பரமேக்காவு தேவஸ்வாம்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. புதிய முடிவின்படி, அமைப்பாளர்கள் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.