பரபர திருப்பங்கள் தரும் கேரள தங்கக்கடத்தல்: தூதரக பாதுகாவலர் தற்கொலைக்கு முயற்சி

திருவனந்தபுரம்: கேரளா தங்கக் கடத்தல் விவகாரத்தில் ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் துணைத் தூதரக பாதுகாவலர் தற்கொலைக்கு முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் துணைத் தூதரக பார்சல் என்ற பெயரில் திருவனந்தபுரம் விமான நிலையம் மூலம் தங்கம் கடத்த முயன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய புலனாய்வு முகமை இப்போது விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், அமீரக துணைத் தூதருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர் ஜெயகோஷ் என்பவருக்கும் கடத்தல் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் கசிந்தன.

இந் நிலையில், நேற்றில் இருந்து மாயமான அவர் தமது வீட்டின் அருகேயுள்ள குளக்கரையில் கையை பிளேடால் அறுத்த நிலையில் மயங்கி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். என்ன காரணத்துக்காக அவர் இப்படி ஒரு முடிவை எடுக்க துணிந்தார் என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.