டேராடூன்: உத்தரகாண்ட் மாநில பாஜக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் திடீர் ராஜினாமா செய்துள்ளார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அங்குள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில், பா.ஜ.க. 57 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப்பிடித்தது. காங்கிரஸ் 11 இடங்களிலும், இதர கட்சிகள் 2 இடங்களை பெற்றது.

இந்த நிலையில், இன்று திடீரென தனது முதல்வர் பதவியை திரிவேந்திரா சிங் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.  மாநில ஆளுநர் பேபி ராணி மவுரியாவை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். அவரது கடிதம் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது குறித்து விரைவில் தெரிய வரும்.

மாநில பாஜகவில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக ராவத் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதல்வருக்கு எதிராக மாநில பாஜக தலைவர்,  பன்ஷிதர் பகத்  செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு சட்டமன்றக் கட்சியின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக உத்தரகாண்ட் மாநில பாஜகவில் ஏற்பட்ட குழப்பத்தை போக்குவம் வகையில்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் ஆகியோர் விவாதித்ததாகவும், அப்போது,  பாஜக தேசிய பொதுச் செயலாளரும், மாநிலப் பொறுப்பாளருமான துஷ்யந்த் ககவுதமும் கலந்துகொண்டதாகவும், அப்போது,  பல எம்.எல்.ஏக்கள் ராவத்தின் செயல்பாட்டு பாணியை கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்தே ராவத் முதல்வர் பதவியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

2022ம் ஆண்டு அங்கு மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், முதல்வர் பதவியில் இருந்து ராவத் விலக வலியுறுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.