உடல்நலக்குறைவு: டிராபிக் ராமசாமி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி…

சென்னை:  பிரபல சமூக  ஆர்வலரான டிராபிக் ராமசாமி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர், சமூக செயற்பாட்டாளர் கரிகால் சோழனை ஆதரித்து பரப்புரை செய்துசெய்து வந்தார் டிராபிக் ராமசாமி. மேலும், தமிழகஅரசின்  சாதனைகளை சுட்டிக்காட்டி ஊடகங்களில் வெளியான  வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் அரசு செலவில் விளம்பரம் வெளியிடுவதை எதிர்த்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இவர் கடந்த  சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில்,  அவரை  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள டிராபிக் ராமசாமிக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அதன் முடிவை பொறுத்தே சிகிச்சைகள் அளிக்கப்படும் என்றும் மருத்துவர்கள்  கூறியுள்ளனர்.