டில்லி:

கோவா மாநிலத்தில் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாஜக ஆட்சி அமைப்பதை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக ஏற்றது.

சமீபத்தில் நடந்து முடிந்த கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் 13 தொகுதிகளில் வென்ற பாஜக பிற கட்சிகளின் ஆதரவுடன் கோவாவில் ஆட்சி அமைக்கக் கோரியது. கோவா முதல்வராக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நாளை பொறுப்பேற்க இருக்கிறார். முன்னதாக அவர் வகித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், கோவாவில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்த மனுவை அவசர வழக்காக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்தே கோவாவில் பாஜகவுக்கு சிக்கல் ஏற்படுமா என்பதைச் சொல்ல முடியும்.

ஏற்கெனவே மணிப்பூரில் பாஜக நடத்திய “சட்டமன்ற விளையாட்டுக்களை” உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறது.